போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகளை வதைக்கும் அபராதம்: பல மாநிலங்கள் ஏற்க மறுத்த நிலையில் தமிழகத்தில் தீவிரம் காட்டுவது ஏன்?

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் 63 திருத்தங்களை கொண்டு வந்தது. அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதத்தை விதித்துள்ளது. பழைய அபராதம் தான் நீடிக்கும் என மேற்கு வங்கம் நிராகரித்து விட்டது; கேரளாவும் இதை நிராகரிக்க புதிய சட்டம் கொண்டு வர உள்ளது. பாஜ ஆளும் குஜராத் கூட, 50 சதவீதம் குறைத்து விட்டது. இப்படி பல பாஜ, பாஜ அல்லாத மாநில அரசுகள் அபராதத்தை நிராகரித்தும், குறைத்தும் உள்ள நிலையில், தமிழகத்தில் என்ன நிலை? ஓசைப்படாமல் மத்திய அரசு உயர்த்தி விதித்த அபராதத்தை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது. இத்தனைக்கும், மாநிலங்கள் நினைத்தால் அபராதத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியே கூறி விட்டார். ஆனால், தமிழகம் மட்டும் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் அமல்படுத்த துவங்கி விட்டது.

நீட் தேர்வு உட்பட பல விஷயங்களில் மத்திய அரசுக்கு பணிந்து, ஆட்சியை தக்க வைக்க  எவ்வளவோ மக்கள் நலன்களை அடகு வைத்து விட்ட தமிழக அரசு, அதே காரணத்துக்காக மக்களை வதைக்கும் கடும் அபராதத்தில் தீவிரம்  காட்டுகிறது என்று பல கட்சிகளும் குற்றம் சாட்டி விட்டனர். விபத்துக்களை குறைக்க கடும் அபராதத்தை தவிர வழியே இல்லை என்று மத்திய அரசு கூறினாலும், சாமான்ய மக்களை கடுமையாக பாதிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

* பொதுவான போக்குவரத்து விதிமீறல் அபராதம் 100ல் இருந்து ரூ.500 ஆனது. * ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 ஆக இருந்த அபராதம் இப்பேது ரூ.1000. * இரு சக்கர வாகனத்தில் அதிகம் பேர் பயணித்தால் ரூ.1000. *சிறுவர்கள் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் ரூ.25,000. * காரில் சீட் பெல்ட் போடாவிட்டால் ரூ.100ல் இருந்து ஆயிரமாக உயர்வு * ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் ரூபாய். * மது அருந்திவிட்டு ஓட்டினால் ரூ.10 ஆயிரம். * ரேசில் ஈடுபடுவோருக்கு ரூ.5000. இத்துடன் பல குற்றங்களுக்கு லைசன்ஸ் சஸ்பெண்ட், 3 ஆண்டு வரை ஜெயில் போன்ற தண்டனைகளும் உண்டு.

டெல்லியில் லாரி ஓட்டுனருக்கு ரூ.2 லட்சம், ராஜஸ்தானில் லாரி டிரைவருக்கு ரூ.1.14 லட்சம் ரூபாய், ஒடிசாவில் ரூ.80 ஆயிரம் என  தாளித்து விட்டனர் போக்குவரத்து போலீசார். தெலங்கானாவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு டாக்சி டிரைவர் 75 முறை விதிமீறல் செய்து அபராதம் கட்டாததை டிஜிட்டல் கருவியில் கண்டுபிடித்தனர் போலீசார். எல்லாவற்றுக்கும் சேர்த்து ரூ.98,830 அபராதம் போட்டனர். தமிழகத்தில் குறைக்கப்படுமா? அபராதம் சரிதானா? இதோ நான்கு கோணங்களில் அலசல்.

Related Stories: