×

திருவண்ணாமலையில் முப்பெரும் விழா இந்தியை திணிக்கும் முயற்சியை திமுக பார்த்து கொண்டிருக்காது: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை: இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் திமுக பார்த்துக்கொண்டிருக்காது என்று முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் கலைஞர் திடலில், திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேனர் வைக்கக்கூடாது என அன்பான வேண்டுகோளாக இல்லாமல் கட்டளையாக பிறப்பித்திருந்தேன். இந்த விழா மட்டுமல்ல, அடுத்து எந்த விழா நடத்தினாலும் இதை கடைப்பிடிக்க வேண்டும். இதை கண்டிப்போடு சொல்கிறேன்.

திமுக வைத்த பேனர் விழுந்து யாராவது இறந்திருந்தால், ஊரே இரண்டுபட்டிருக்கும். திட்டமிட்டு பிரசாரம் செய்திருப்பார்கள். அதிமுக பேனர் விழுந்து ஒரு மாணவி இறந்திருக்கிறார். பேனர்கள் விளம்பரத்துக்கு பயன்படவில்லை. மக்கள் வெறுப்பதற்குதான் பயன்படுகிறது. பேனர் வைக்க மாட்டோம் என இந்த விழாவில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வரும், அமைச்சர்களும் 14 நாட்கள் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளனர். ரூ.8,335 கோடி முதலீடு கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அவர்களுக்கு துப்பில்லை. 41 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்கிறார்.

பேரை சொல்ல முடியுமா, எந்த நாடு என்று சொல்ல முடியுமா? எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஈட்டியிருப்பதாக நியூயார்க் நகரில் இருந்து முதல்வர் பொய் சொல்கிறார். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.3 லட்சம் கோடிக்கு செய்யப்பட்டதாகவும், அதில் 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கியிருப்பதாகவும் பொய் சொல்கிறார். நான் பொறாமைப்படுவதாகவும் கூறுகிறார். பொறாமைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா?

திமுகவின் சாதனைகளை பார்க்க வேண்டுமானால், சோழிங்கநல்லூரில் இருந்து ஓஎம்ஆர் சாலை வரையிலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இருங்காட்டுகோட்டை வரையிலும் தொடங்கியிருக்கிற தொழிற்சாலைகளை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இப்போதோ நாட்டை குட்டிச்சுவராக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு எதிரான மசோதா 2 முறை நிறைவேற்றியும் அதை கண்டுகொள்ளவில்லை. ரயில்வே மற்றும் தபால்துறையில் இந்தி திணிக்கப்படுகிறது. கலாச்சார படையெடுப்பு நடக்கிறது. அதை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தி பேசாத மக்கள் மீது தேள்கொட்டியது போல அந்த தகவல் வந்திருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மொழி அவசியம், இந்தியா அப்போதுதான் வளரும். அந்த மொழி இந்திதான் என்கிறார். பின்னர் தமிழே படிக்கக்கூடாது என்று சட்டமும் கொண்டு வருவார்கள். இது கலாச்சார படையெடுப்பு. நாளை மாலை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம். இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் திமுக பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், த.வேணுகோபால் (பெரியார் விருது), சி.நந்தகோபால்(அண்ணா விருது), ஏ.கே.ஜெகதீசன்(கலைஞர் விருது), சித்திரமுகி சத்தியவாணிமுத்து(பாவேந்தர் பாரதிதாசன் விருது), தஞ்சை ச.இறைவன்(பேராசிரியர் விருது) வழங்கப்பட்டது.
மேலும், முரசொலி அறக் கட்டளை சார்பில் நடந்த பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று, பணமுடிப்பு, சிறப்பு சாதனை புரிந்தவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது மற்றும் நற்சான்றிதழ் பணமுடிப்பு ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டிஆர்.பாலு, கனிமொழி எம்.பி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள்:
ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழாவை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். கலைஞர் அறக்கட்டளை ஏற்படுத்தி கல்வி, மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும். தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து சிறப்பாக பணியாற்றும் கட்சியினரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதன்தொடர்ச்சியாக திராவிட படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர், சின்னத்திரையினர், படைப்பாளிகளுக்கு ஜூன் 3ம் தேதி விருதுகள் வழங்க இருக்கிறோம். என விழாவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : DMK ,Thiruvannamalai , DMK does not see attempt to impose Hindi in Thiruvannamalai
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...