பேனர் கட்டுப்பாடுகள் எதுவும் ஆளுங்கட்சிக்கு கிடையாது: திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு

அவனியாபுரம்: பேனர் வைக்க மற்ற கட்சிகளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு விதிப்பதில்லை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி அளித்த பேட்டி: பாஜ அரசு எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது வெளிப்படையாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே தேசம், ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக முடியும் என்று கூறியிருக்கிறார். இதுதான் பாஜவின் நீண்டகால கனவு திட்டம். இந்தி மொழியை தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் இலக்கு. அதற்கேற்ப கல்வி கொள்கையையும் மாற்றி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. தேசிய வரைவு கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். பேனர் வைக்க மற்ற கட்சிகளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு விதிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் பேட்டி: திருச்சி விமானநிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டியில், பேனர் வைக்கும் விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல பல வழிமுறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் பேனர் கலாசாரத்தை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது பள்ளி மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் இடைநீக்கம் செய்யக்கூடிய ஒரு முயற்சி. சாதாரண அடித்தட்டு மக்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் கல்வி சென்று சேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழக அரசு துணை போவது வேதனையளிக்கிறது என்றார்.

Related Stories: