திண்டுக்கல் தனியார் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி பரிதாப சாவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி பாம்பு கடித்து பலியானார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பெரியூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமர் மகள் வர்ஷா (14). திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்த விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வர்ஷா விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஏதோ பூச்சி கடித்தது போல உணர்ந்தார். விடுதி காப்பாளரிடம் ‘எலி கடித்து விட்டது’ என்று வர்ஷா கூறியுள்ளார். மாணவிக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

சிறிதுநேரத்தில், திடீரென வாயில் நுரை தள்ளி வர்ஷா மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சிடைந்தனர். அவரை இரவோடு இரவாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வர்ஷா பரிதாபமாக இறந்தார். திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய போலீசார் விடுதி அறையை சோதனை செய்தனர். விடுதி அறைக்குள் பாம்பு ஒன்று மறைந்திருந்தது. அதை அடித்துக் கொன்றனர். இதையடுத்து மாணவி பாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. விடுதி அறைக்குள் மாணவியை பாம்பு கடித்ததும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாததால் அவர் பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்ததும் இப்பகுதி மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: