×

பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதா?

பரமக்குடி: பரமக்குடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் ஊரணியை, ஊர் மக்கள் பொக்லைன் மூலம் தூர்வாரியுள்ளனர். அப்போது ஊரணியில் பழங்கால மக்களின் புதைவிடம் தெரிந்தது. மனிதர்கள் இறந்த பின் அடக்கம் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், எலும்புகள், பானை ஓடுகள் உடைந்த நிலையில் துண்டு துண்டாக சிதறிக் காணப்பட்டுள்ளது. அகன்ற வாய் கொண்ட சுடுமண் பானை, முதுமக்கள் தாழிகள் மேற்பகுதி உடைந்தும், கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூம்பு வடிவத்திலான பொருளும் இருந்தது. கலையூர் ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் ஐரோப்பிய நாட்டு மண்பாண்ட பொருள்கள் இருந்துள்ளது. இந்த கிராமம் வைகை ஆற்று கரையோரம் அமைந்திருப்பதால், தமிழர்களின் வைகை நாகரீகம் தெரிய வருகிறது. மேலும் அழகன்குளம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகங்கள் இருந்துள்ளது. துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டினர் கலையூர் கிராமத்திற்கு வந்து, பண்டமாற்று முறையை கையாண்டுள்ளனர்.

கலையூர் கிராமத்தில் விளையும் பருத்தி, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை பெற்று கொண்டு, ஐரோப்பிய நாட்டு கண்ணாடி போன்ற மண்பாண்ட பொருட்களை மாற்றாக கொடுத்திருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தமக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கலையூர் கிராமத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை  மேற்கொண்டால், சிவகங்கை மாவட்டம், கீழடியில் கிடைப்பதைப் போல பண்டைய  காலத்து பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Paramedic discovery in Paramakudi area: 2 millennia ago?
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...