இணைப்பை கண்டித்து வரும் 26, 27ல் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம்

சேலம்: வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வங்கி அதிகாரிகள், வரும் 26, 27ம் தேதி ஆகிய இரு நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய யூனியன் வங்கி அதிகாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் சேலத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமபுத்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஜவகர் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் பொதுச் செயலாளர் நாகராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கி அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு, வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாடிக்கையாளர்களுக்கான சேவை வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது வங்கிகள் இணைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து அகில இந்திய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26 முதல் 27ம் தேதி வரை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில், நாடு முழுவதும் உள்ள 1.40 லட்சம் வங்கி கிளைகளில் பணிபுரிந்துவரும், 3.78 லட்சம் வங்கி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் வங்கிகள் திறந்திருந்தாலும், பணிகள் எதுவும் நடக்காது. இதனால், வாடிக்கையாளர் சேவை முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Related Stories: