51 நாள் பரோல் முடிந்தது மகள் திருமணம் நடக்கும் முன்பே நளினி மீண்டும் சிறையிலடைப்பு

வேலூர்: மகள் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பரோலில் வந்த நளினி, திருமணம் நடப்பதற்கு முன்பே மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளுக்காக உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 25ம் தேதி 1 மாத பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். பின்னர் அவருக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி 51 நாள் பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4 மணியளவில் நளினியை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் மீண்டும் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

மகள் திருமண ஏற்பாடுகளுக்காக சிறையில் இருந்து பரோலில் வந்த நளினி 51 நாட்கள் வெளியே தங்கியிருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்த்து வந்த மகளின் திருமணம் நடைபெறாத சோகத்துடன் அவர் மீண்டும் சிறைக்கு சென்றார். முன்னதாக தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து நளினியின் உடமைகளான பக்கெட், பாத்திரங்கள், படுக்கை விரிப்பு, துணிமணிகள் வைக்கப்பட்டிருந்த பை ஆகியவற்றை அந்த வீட்டின் வேலைக்கார பெண் எடுத்து சென்று போலீஸ் வேனில் வைத்தார். தொடர்ந்து சோகமாக வீட்டில் இருந்து வெளியே வந்த நளினி கண்களில் நீர்ததும்ப போலீஸ் வேனில் அமர்ந்தார். பின்னர், வேலூர் பெண்கள் தனிச்சிறை மருத்துவக் குழுவினர் நளினியின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அதையடுத்து சிறைக்காவலர்கள் நளினியை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: