சேலத்தில் மழையால் மண்சரிவு ஒரு டன் பாறாங்கல் உருண்டு வீட்டில் மோதி தாய், மகள் காயம்

சேலம்: சேலத்தில் மண் சரிவால் 1 டன் எடை கொண்ட பாறாங்கல் விழுந்தது. இந்த பாறை, வீடு மீது மோதியதால் சுவர் இடிந்து தாய், மகள் காயமடைந்தனர். சேலம் நெத்திமேட்டில் உள்ள எஸ்பி அலுவலகம் பின்புறத்தில் கரிய பெருமாள் கோயில் கரடு உள்ளது. இந்த கரட்டை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சேலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கரிய பெருமாள் கோயில் கரட்டில் வடக்கு புறத்தில் நேற்று காலை 9 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு டன் அளவில் பெரிய பாறாங்கல் கரட்டில் இருந்து உருண்டு வந்துள்ளது. அப்போது, அங்கு கரட்டையொட்டி கட்டப்பட்டுள்ள 3 மாடி கொண்ட வீட்டின் சுவர் மீது பாறாங்கல் மோதி நின்றது. அந்த வீட்டில் பூங்கொடி(45), அவரது மகள் மைதிலி(22), பேத்தி அர்ச்சனா(5) ஆகியோர் இருந்தனர்.

பாறாங்கல் மோதியதில் சுவரில் விரிசல் ஏற்பட்டு செங்கல் சரிந்தது. இதில் மைதிலி, அர்ச்சனாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அன்னதானப்பட்டி போலீசார், வருவாய்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாறாங்கல் மோதிய வீட்டு சுவரில் சிறிய அளவில் ஓட்டை விழுந்தது தெரிந்தது. அந்த பாறாங்கல்லை அகற்றும் பணியில் வருவாய்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் குடியிருப்போரை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: