நகை பட்டறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 60 பேர் ரயிலில் சொந்த ஊர் திரும்பினர்: உதவிய நீதிபதிக்கு சிறுவர்கள் நன்றி

சென்னை: சென்னை யானைகவுனி, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் செயல்படும் நகை பட்டறைகளில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் அதிகளவில் கொத்தடிமையாக வேலை செய்வதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.அதன்பேரில், அதிகாரிகள் வால்டாக்ஸ் சாலை, யானைகவுனி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன், தீவிர சோதனை நடத்தியபோது, 5 நகை பட்டறைகளில் 60 வடமாநில சிறுவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வது தெரியவந்தது. உடனடியாக சிறுவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.விசாரணையில், மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குடும்ப கஷ்டத்தின் காரணமாக அவர்களின் பெற்றோர் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்தனர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி, கடந்த சில நாட்களுக்கு முன், ராயபுரத்தில் உள்ள அரசினர் காப்பகத்திற்கு சென்று, அங்கு தங்கியிருந்த மேற்கு வங்க சிறுவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், செல்வதற்கு பணம், சரியான வழிகாட்டி இல்லையென்றும் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி, அதிகாரிகளிடம் கலந்து பேசி, சிறுவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்கை முடிவு எடுத்தார். அதன்படி மேற்கு வங்கத்திற்கு செல்லும் ரயிலில் ஒரு பெட்டியை பதிவு செய்து சிறுவர்களை 60 பேரையும் முறைபடி போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். இதையடுத்து சிறுவர்கள் அனைவரும் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.மேலும், சிறுவர்கள் வருவது குறித்து மேற்கு வங்க டிஜிபியை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

Related Stories: