எம்டிசியை தொடர்ந்து விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய மின்சார பஸ் வழங்க திட்டம்? அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: எம்டிசியை தொடர்ந்து எஸ்இடிசியில் புதிய மின்சார பஸ்சை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கிற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கிற வகையிலும், மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழகத்தில் இயக்கிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் முன்னிலையில் கடந்த 28.3.2018ல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், லண்டன் மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘சி-40’ முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ‘ஃபேம் இந்தியா-2’ திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமான, 64 நகரங்களுக்கு, 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்கிட இசைவு அளிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு 525 மின்சாரப் பேருந்துகள் வாங்கி இயக்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் செயல்பாட்டில் வருவதற்கு முன்னோட்டமாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு புதிய மின்சார பேருந்தினை முதல்வர் கடந்த மாதம் 26ம் ேததி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மின்சாரப் பேருந்து பரிசோதனை அடிப்படையில், நாள்தோறும் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து ‘ஏ1’ வழித்தடமான மயிலாப்பூர், அடையார் வழியாக திருவான்மியூர் வரை, காலை 2 நடையும், மாலை 2 நடையும் இயக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மற்றொரு பஸ்சும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்இடிசி நிர்வாகத்திற்கு புதிய மின்சார பஸ்சை அறிமுகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எம்டிசி நிர்வாகத்துக்கு புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து எஸ்இடிசி நிர்வாகத்தில் இத்தகைய பஸ்சை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். முதல்கட்டமாக சார்ஜிங் பாயின்டுகள் எங்கு அமைப்பது என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: