×

குடிமராமத்து திட்ட பணிகளில் குளறுபடி பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலாளர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலாளர் திடீரென பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இதற்கு குடிமராமத்து பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சிறப்பு பணிகளை கவனிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில்,  குடிமராமத்து திட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில், பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலாளராக பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர், குடிமராமத்து திட்ட பணிகள் உட்பட பல பணிகளை கவனித்து வந்தார். அவர் தினமும் பொறியாளர்கள் உடன் ஆலோசனை நடத்துவது, பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் திடீரென அவரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலாளர் பாலாஜி குன்னூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேயிலை வாரிய செயல் இயக்குனராக பணியிட மாற்றப்பட்டுள்ளார். அவர் அந்த இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த பணியிடத்திற்கு பொறுப்பு அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடிமராமத்து பணிகளில் குளறுபடி காரணமாக நீக்கப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டாரா என்பது குறித்து பொதுப்பணித்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Secretary of State ,Public Works Department ,Tamil Nadu , Citizenship Project, Pursuit, Public Works Department, Secretary, Government
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...