வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஜெனரேட்டர்

* வாடகைக்கு வாங்கி வைக்க வேண்டும்

* பொறியாளர்களுக்கு தலைமை அதிகாரி அறிவுரை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மின்வெட்டு, மின்நிறுத்தம் போன்றவற்றை சமாளிக்க கூடுதலாக ஜெனரேட்டரை வாடகைக்கு வாங்கி வைக்க பொறியாளர்களுக்கு முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் 8ம் தேதி இடி, மின்னலுன் மழை பெய்த நிலையில், திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஜெனரேட்டர் இயங்காததால் ஐசியு வார்டில் இருந்த 3 பேர் ஆக்சிஜன் இன்றி மூச்சுதிணறி பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இந்தமழை காலக்கட்டங்களில் முன்னெச்சரிக்கையாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில் மேற்கூரைகள் வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அந்த மேற்கூரையில் தண்ணீர் தேங்குகிறதா, கட்டிடங்களில் மழை நீர் ஒழுகுகிறதா என்றும், கழிவு நீர் குழாய் பாதை அடைப்பு பிரச்னை, மேலும், கட்டிடங்களில் மரங்கள் முளைத்துள்ளதா எனபதையும் ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி உடன் கூடிய மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ஐசியு, சிசியு வார்டுகளில் மின் இணைப்பு தர வேண்டும். கூடுதலாக ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் மழை நீர் தேங்குவதன் மூலம் நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும், பருவமழை நேரங்களில் அனைத்து அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த காரணம் கொண்டும் விடுப்பு கிடையாது. வடகிழக்கு பருவமழை நேரங்களில் பல்நோக்கு பேரிடர் மீட்பு மையங்களில் மக்கள் தங்க வைக்க வாய்ப்புள்ளது. எனவே, பல்நோக்கு பேரிடர் மையங்களில் கழிப்பிட வசதிகள், தண்ணீர் வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், இந்த மையங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோட்ட செயற்பொறியாளர்களுக்கு கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: