×

பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்டது சீரமைக்கப்படாத சாலை பள்ளங்களால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் பாதாள சாக்கடை இணைப்புக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பிறகு, நூற்றுக்கணக்கான தெருக்களில் பல லட்சம் செலவில் புதிதாக சாலைகள் போடப்பட்டன. இச்சாலைகளை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீபகாலமாக, பல வார்டுகளில் உள்ள தெருக்களில் வீடுகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படுகிறது. அப்போது, பாதாள சாக்கடை மேன்ஹோலில்  இருந்து பல அடி தூரத்திற்கு சாலையில் பள்ளம் தோண்டி வீட்டுக்கு  இணைப்பு கொடுக்கின்றனர். ஆனால், அவ்வாறு தோண்டப்படும் சாலைகள் பல இடங்களில் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இவ்வாறு சீரமைக்கப்படாத சாலைகளில் அதிக அளவில் லாரி, மினி லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அப்போது, சாலைகள் மேலும்  சேதம் அடைகின்றன. இவ்வாறு, குண்டும் குழியுமாக கிடக்கும்  சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். மேலும், இரவில் இந்த பள்ளங்கள் சரிவர தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். பாதசாரிகளும் சாலையில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

சில தெருக்களில் மட்டும், இவ்வாறு தோண்டப்பட்ட  பள்ளங்களை சிமென்ட் கலவை போட்டு மூடி வருகின்றனர். அது கூட, வாகனங்கள் வேகமாக செல்லும் போது உடைந்துவிடுகிறது. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, மேலும் சாலை சேதமடைந்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை அதிகாரிகள் பாதாள சாக்கடை இணைப்பு  கொடுக்க தோண்டிய பள்ளங்களை சீரமைக்க முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் சாலைகளில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். எனவே, பெருகி வரும் விபத்துகளை தடுக்க, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பதற்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : sewer crashes ,Motorists , Sewer, connection, by grooves, accident
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி