×

வடகிழக்குப் பருவ மழை குறித்து ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை பேரிடர் பாதிப்பு உள்ள 4,399 பகுதியில் மீட்பு பணிக்கு 30,759 பேர் தயார்: வருவாய், பேரிடர் மேலாண்மை துறைஅமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4,399 இடங்கள் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான வழிகாட்டுதல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. கையேட்டினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில்வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டி.ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்குப் பருவ மழைக்காலம்.  இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 4,399 இடங்கள் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 30,759 முதல் நிலை காப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் 9162 மகளிர் ஆவர். கால்நடைகளை காப்பாற்ற 8624 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அரசு சாரா நிறுவனங்களிலிருந்து தன்னார்வலர்களைக் கொண்டு பேரிடர் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல அளவில் பல துறைகளை இணைத்து குறித்த காலத்திற்குள் மக்களை வெளியேற்றவும், அதன் மூலம் மனித உயிரிழப்புகளை குறைக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனைகளில் உயிர்காக்கும் இயந்திரங்களுக்கு தேவையான மின்வசதிக்காக வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆக்சிஜன் உருளைகளை வைத்திருக்க வேண்டும். அத்தியாவசியப் உணவு பொருட்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும். ஏரிகள், அணைகள், நீர் சேமிப்பு பகுதிகள் திறக்கும்போதோ, வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையிலோ அவற்றை சார்ந்துள்ள பகுதி மக்களுக்கு முன் எச்சரிக்கை அளித்து மக்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் காலத்தில் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகியவற்றை குறைக்க ஆவன செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை, வெள்ளக் காலங்களின் போது அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை சமூக ஊடகங்கள், வலை தளங்களில் வெளியிட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஏரி, அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போது செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : areas ,Northeast ,monsoon disaster ,Disaster Management Department , Northeast Monsoon, Regulators, Circular, Disaster Risk, Recovery Work, Ready: Revenue, Disaster Management Department
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை