பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை ஆந்திரா வியாபாரிகள் உட்பட 8 பேர் கூண்டோடு கைது

* 1,400 மாணவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்

* நாள் ஒன்றுக்கு 12.5 கிலோ சப்ளை

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா வியாபாரிகள் உட்பட 8 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர். சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 1,400 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சார்பில் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த மாதம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த 10ம் வகுப்பு மாணவன் கஞ்சா போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவரின் தந்தை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அந்த மாணவன் பலத்த காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனின் தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க  இணை கமிஷனர் சுதாகருக்கு உத்தரவிட்டார். அதன் படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுணசிங் மேற்பார்வையில் அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தனிப்படையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ரகசியமாக சாதாரண உடையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சில மாணவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பதை பார்த்து மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மதுரை மேலூரை சேர்ந்த சிங்கராஜ்(32) என்பவர் அடையாறு பகுதியில் வீடு எடுத்து தங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐடி கம்பெனியில் பணிபுரிந்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் சிங்கராஜை பிடித்து விசாரித்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவர்கள் மற்றும் இன்ஜினியர்களுக்கு ஆட்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் மூலம் சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ஐடியில் பணிபுரிவோர் என 1,400 பேர் தங்களிடம் தினசரி வாடிக்கையாளர்களாக இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட மாணவர்கள் தங்களை செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சா வாங்கி வந்தது தெரியந்தது.

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சாவை மொத்தமாக மதுரவாயல் பகுதியில் வசிக்கும் ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த பிரியலட்சுமி(22), தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த அமல்தாஸ்(எ) சுப்பிரமணி(44) ஆகியோரிடம் வாங்கி வந்து 5 முதல் 10 கிராம் பொட்டலங்களாக மடித்து தொலைபேசியில் கேட்கும் நிரந்தர வாடிக்கையாளருக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 12.5 கிலோ கஞ்சா விற்பனை செய்து வந்தோம். இதற்காக நாங்கள் செல்போனில் ரகசிய குறியீடு கொண்ட குறுஞ்செய்தி மூலம் தடையின்றி விற்பனை செய்து வந்தோம்.

மேலும் சிங்கராஜ் அளித்த தகவலின் படி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த பாண்டி, அவரது கூட்டாளிகளான செல்வம்(56), துரை மற்றும் வரதராஜ்  மற்றும் ஆந்திரா நெல்லூரை சேர்ந்த பிரியலட்சுமி, தேனாம்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியம் அவரது மகன் சூரிய பிரகாஷ் மற்றும் தேனி மாவட்டம், மேலக்கூடலூர், மந்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன்(57), தேனாம்பேட்டை, கிரியப்பா சாலை பகுதியை சேர்ந்த அமல்தாஸ் (எ) சுப்பிரமணி (44), மற்றும் சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (21), நெல்லூர் வெங்கடாசல ரோடு சேர்ந்த பிரியலட்சுமி (22), மதுரவாயில் திடீர் நகர், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் (56), புளியந்தோப்பு ஆர்.கே காலனியை சேர்ந்த துரை(65), மதுரவாயில், நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (55) ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனார். அவர்களிடமிருந்து 43 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: