×

போர்க்களம் தயார் புறப்பட தயாராகுங்கள்: மதிமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அத்தனை பேரும் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுதான் அண்ணா பிறந்தநாள் கொண்டாடக் கூடிய இந்த நல்ல நாளில் நாம் எடுக்கக்கூடிய உறுதி மொழியாக இருக்கும் என்று மதிமுக மாநாட்டில் திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் துரைசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மதிமுக முன்னின்று நடத்தும் இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன். நான் பங்கேற்கக்கூடிய மதிமுகவினுடைய முதல் மாநாடு இது. வைகோவின் வேண்டுகோள் என்றுகூட சொல்ல மாட்டேன். அவருடைய கட்டளையை ஏற்று மாநாட்டை தொடங்கி வைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றுள்ளேன். ரயில்வே துறையாக இருந்தாலும் அஞ்சல் துறையாக இருந்தாலும் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. லேசாக கண் அயர்ந்தால் இந்தியைத் திணித்து விடுவார்கள். நீட் தேர்வின் மூலமாக மருத்துவக் கல்வியை சிதைத்து விட்டார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மாநில ஆளுநர் தடுத்து வைத்து இருக்கிறார்.

காவிரியில் துரோகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ போன்ற திட்டங்களால் தமிழ் மண்ணை இன்றைக்கு சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் கலாச்சாரத் தாக்குதல் இன்னொரு பக்கம் ரசாயன தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறன. இவற்றைத் தடுக்க வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது. அவருடைய சகோதரன் என்ற முறையில் நான் உரிமையோடு சொல்கிறேன், கொஞ்சம் உடல்நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்னுடைய வேண்டுகோளாக மட்டுமல்ல, இதனை கண்டிப்போடு, உரிமையோடு சொல்கிறேன். மதிமுக தொண்டர்களுக்கும் அந்த உணர்வுதான் இருக்கும்.

உங்களுக்காக அல்ல உங்கள் குடும்பத்திற்காக அல்ல, இந்த இனம், மொழி, நாட்டினுடைய நலத்தை பேணி பாதுகாத்திட வேண்டும், அவருடைய ஆரோக்கியத்தில்தான் தமிழ்ப் பேரினத்தின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாராகிக் கொண்டிருக்கும் போர்க்களத்திற்கு அத்தனை பேரும் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுதான் அண்ணா பிறந்தநாள் கொண்டாடக் கூடிய இந்த நல்ல நாளில் நாம் எடுக்கக்கூடிய உறுதி மொழியாக இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது வைகோ உணர்ச்சி வசப்பட்டார். வழியும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மு.க.ஸ்டாலின் உரையை கவனித்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திராவிட இயக்கத்திற்கு எழுந்துள்ள அறைகூவலை முறியடிக்க அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாட்டில் மதிமுக உறுதி மேற்கொள்கிறது. மாநில சுயாட்சி கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி, கூட்டாட்சித் தத்துவம் நிலைநிறுத்திட, மாநிலக் கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, இந்துத்துவா சனாதன சக்திகளின் ‘இந்து ராஷ்டிரா’ கருதுகோளை முறியடிக்கத் தேவையான அரசியல் முன்னெடுப்புகளை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவுடன், பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள வேண்டும்.

மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் பாஜ அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு இசைவு அளிக்கக்கூடாது, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Mathimukha Conference , Battlefield Ready, Mathimukha Conference, MK Stalin, Text
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...