×

ஆவின் முறைகேடுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: ஆவின் முறைகேடுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனத்தில் பால் எடுத்து, மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் பால் விநியோகம் செய்து வரும் முகவர்களின் கழிவுத் தொகையும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது. முகவர்களுக்கு உயர்த்தப்பட்ட கழிவுத் தொகையில் 50 சதவீதம் வரை ஆவின் அதிகாரிகள் கேட்பதாகவும், அதனைத் தர முடியாது எனில் 1000, 2000 லிட்டர் பால் எடுத்து விநியோகம் செய்து வரும் முகவர்களை நீக்கி விட்டு, தனியார் பெரும் நிறுவனங்களிடம் பால் விநியோகப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பால் முகவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நுகர்வோர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். சிறு முகவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிர்வாகம் செய்ய இயலவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. சென்னை பெருநகரில் மட்டும் தினசரி 12 லட்சம் லிட்டர் பால் விநியோகம் நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டால் இதில் கைமாறும் தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் 1000 லிட்டர் பால் எடுத்து விநியோகம் செய்யும் சிறு சிறு முகவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்: கருத்துரிமை பறிக்கப்படுவதை ஜனநாயக சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு, நெல்லை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு உரிய விளக்கம் அளித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : CM ,Ava ,Mutharasan , Awin abuse, CM intervenes, prevents, Muttarasan
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!