காவிரி கூக்குரல் பேரணி சென்னை வந்தது: விழாவில் முதல்வர், துணை முதல்வர், ஜக்கி வாசுதேவ் பங்கேற்பு

சென்னை: காவிரி வடிநிலப்பகுதிகளில் 242 கோடி மரம் நடுவதற்காக ஈஷா அறக்கட்டை நிறுவனர் தொடங்கியுள்ள காவிரி கூக்குரல் இயக்க பேரணி நேற்று சென்னை வந்தது. பேரணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். தென்னிந்தியாவின் உயிர் நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கி 12 வருடங்களில் காவிரி வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்காக தனது பயணத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த 3ம் தேதி தலைக்காவிரியில் தொடங்கினார்.  

பெங்களூர், மைசூர், ஒசூர், தர்மபுரி, புதுச்சேரி வழியாக பைக்கில் நேற்று சென்னைக்கு வந்தார். இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, நடிகை சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘காவிரி நதியை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், காவிரி கூக்குரல் என்ற ஒரு இயக்கத்தை துவங்கியுள்ளது பெருமை அளிக்கிறது.

வருகின்ற வழியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக மரக்கன்றுகளை நடுகின்றவர் சத்குரு தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஒத்துழைக்க வேண்டும். சத்குரு எடுக்கும் முயற்சிக்கு எங்களுடைய அரசு துணை நிற்கும்’’ என்றார்.

 துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘‘அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொடங்கியிருக்கும் இந்த  இயக்கம்  மிகவும் பாராட்டுக்குரியது’’ என்றார். ஜக்கி வாசுதேவ் பேசுகையில், ‘‘கடந்த 72 ஆண்டுகளாக ஏதேதோ வளர்ந்துள்ளது. விவசாயம் வளரவில்லை. இதுவரை 4 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரத்து 96 மரக்கன்றுக்ளை கொடுத்துள்ளனர். இது போதாது, நம்முடைய இலக்கு 242 கோடி மரங்கள். இது எனக்கானதோ, ஈஷாவுக்கானதோ இல்லை. நம்முடைய வருங்கால சந்ததினருக்கு. எனவே அனவரும் செயல்பட வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: