×

மதுரை ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பரிதாப சாவு

மதுரை: மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம், மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, புதூர் இஎம்ஜி நகரை சேர்ந்தவர் மணிமுத்து (29). இவரது மனைவி சக்திகாளி (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு செப். 6ம் தேதி திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான சக்திகாளியை நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் புதூர் மாநகராட்சி நகர்புற சுகாதார மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். எவ்வித பிரச்னையும் இல்லை. இரவு 8 மணிக்குள் சுகப்பிரசவம் ஆகிவிடும் என உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி, மணிமுத்து மற்றும் அவரது தாயார், உறவினர்கள் வெளியில் காத்திருந்தனர்.

இரவு 9 மணி கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. சக்திகாளியின் கதறல் சத்தம் மட்டுமே கேட்டுள்ளது. குழந்தை பிறக்காததால் பதற்றமடைந்த உறவினர்கள், ‘நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறோம்’ என கேட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்த நர்ஸ்கள் ‘நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ எனக் கூறி, சக்திகாளியை அனுப்ப மறுத்து விட்டனராம். நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் மருத்துவமனை உள்ளே சென்று பார்த்தபோது, சக்திகாளி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உறவினர்கள் அங்கிருந்த 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால், நர்ஸ்கள் தகவல் கொடுத்தால்தான் வருவோம் எனக்கூறி மறுத்துள்ளனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சக்திகாளியை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிமுத்து கூறும்போது, ‘‘எனது மனைவியை பிரசவத்திற்கு சேர்த்தபோது, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் நள்ளிரவு டாக்டர்கள் பணியில் இல்லை. நர்ஸ்கள் மட்டுமே பிரசவம் பார்த்தனர்.

இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி இறந்து விட்டார். மேலும் உடல் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தது. எனது மனையின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புதூர் போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோரிடம் புகார் கொடுத்து இருக்கிறேன்’’’ என்றார். இதற்கிடையே மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி மருத்துவக் கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா, புதூர் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai Primary Health Hospital , Madurai, Primary Health Hospital, Nurses, Childbirth, Pregnancy, Fear
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...