டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம்: கச்சா எண்ணெய் சப்ளையை பாதியாக குறைத்தது சவுதி: பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம்

துபாய்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதால், வெளிநாடுகளுக்கான கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு பாதியாக குறைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது. இது குறித்து சவுதி எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துல்ஆசிஸ் பின் சல்மான் கூறுகையில், ‘‘அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த பணியாளர்களும் காயம் அடையவில்லை. தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் சவுதி அரோம்கோ அடுத்த கட்ட தகவல்களை வெளியிடும்,’’ என்றார். எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ அல்லது ஈரான் நாடோதான் இந்த டிரோன் தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதலுக்கு, ஈரான்தான் காரணம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் யாகியா சாரி அளித்த பேட்டியில், ‘‘ஹவுதி அமைப்பினர் 10 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். போர் தொடர்ந்தால், தாக்குதல் இன்னும் மோசமாகும். இதற்கு ஒரே வழி எங்கள் மீதான தாக்குதலை சவுதி அரசு நிறுத்துவதுதான்,’’ என கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலை முறியடிக்க சவுதி தயாராக இருப்பதாக இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

Related Stories: