ஆந்திர மாநிலம் தேவிப்பட்டினம் அருகே கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 12 பேர் பலி: 27 பேர் உயிருடன் மீட்பு 22 பேரை தேடும் பணி தீவிரம்

திருமலை: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் இறந்த நிலையில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 22 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கண்டிபோச்சம் கோயிலில் இருந்து  பாப்பிகொண்டா சுற்றுலாத் தலம் நோக்கி நேற்று 50 சுற்றுலா பயணிகள், 11 ஊழியர்கள் என 61 பேர் கொண்ட குழு ஒன்று கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு மூலம் சென்று கொண்டிருந்தது. தேவிப்பட்டினம் மண்டலம் கச்சனூர்  அருகே ெசன்றபோது ஆற்றின் சுழலில் எதிர்பாராமல் சிக்கி, சுற்றுலா படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் சென்றவர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்புப்பணியில் இறங்கினர். மேலும் தகவல் அறிந்த முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர், மாநில அவசரகால மீட்புக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் கொண்ட 140 பேர் கொண்ட மீட்பு குழுக்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் களம் இறங்கின. மேலும் ஹெலிகாப்டர்கள் மூலமும் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.இந்நிலையில், மாலை 5 மணி வரை ஆற்றில் இருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 22 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. அத்துடன் சம்பவ இடத்துக்கு மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அவந்தி சீனிவாஸ் வந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில், ‘‘விபத்தில் சிக்கிய சுற்றுலா படகு சுற்றுலாத்துறையின் அனுமதி பெறவில்லை. இந்த படகு வெங்கட்ரமணா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் அனுமதியை யார் கொடுத்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.ஆற்றில் மீட்புப்பணிகள் மாலை 6 மணி  வரை மட்டுமே நடக்கும் எனவும், விபத்து நடந்த கச்சனூர் கோதாவரி  ஆற்றுப்பகுதியின் இருபுறமும் மலைத்தொடர்கள் உள்ளதால் விரைவில்  இருட்டிவிடும் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்வதில் சிக்கல் ஏற்படும்  என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் நடந்த இந்த விபத்து அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 21 பேர் பலி

கச்சனூர் கோதாவரி ஆற்றுப்பகுதியில் கடந்த ஆண்டும் இதேபோல் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 21 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே இடத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக கோதாவரி ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விபத்து நடந்த தேவிப்பட்டினம் கச்சனூர்  அருகே ஆற்றில் நீரின்  வேகம் அதிகமாக இருப்பதுடன், அங்கு சுழற்சியும் அதிகமாக இருக்கும். இத்தகைய சூழலில் சுற்றுலாத்துறை அனுமதி பெற்று முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மட்டுமே சுற்றுலா படகுகள் இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் விபத்தில் சிக்கிய படகு சுற்றுலா துறையின் அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளது அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து தவறுகள் நடப்பதை உறுதி செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: