×

மழை நீர் சேமிப்பு திட்டம் போல் மரம் வளர்ப்போம் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கூக்குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- 2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 4.60 லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மனிதன் நட்ட மரங்களை விட மண்ணே நட்ட மரங்கள் தான் அதிகம். இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் மரங்கள் இன்றியமையாதது; மரங்களை தெய்வமாக வழிபடுவது நம் கலாச்சாரம். மரங்கள் இருப்பதால் தான் ஓசோன் பாதுகாக்கப்படுகிறது: நீர்வளம் பெருகுகிறது. மழை நீர் சேமிப்பு திட்டம் போல் மரம் வளர்ப்போம் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். தமிழக மக்கள் முன்வந்து மரங்களை நட்டால் தமிழகம் மேலும் வளம் பெரும். மரங்களை நட்டால் நல்ல காற்று,  மழை கிடைக்கும்; இவைகள் கிடைத்தாலே மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் திட்டம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாடு முழுவதும் தடை செய்ய பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காவிரியை பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை குடியரசு தலைவரின் நாடாளுமன்ற உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுயள்ளார்.


Tags : People's Movement ,Raise Tree Like Rain Water Saving Program , Rain Water Saving Program, Tree Planting Program, Chief Minister Palanisamy
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா