×

தமிழகத்தில் கிராமங்களுக்கும் சேவை கிடைக்க 1000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்: உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது

வேலூர்: தமிழகத்தில் கிராமங்களுக்கும் சேவை கிடைக்கும் வகையில் 1000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உயர்தர மருத்துவ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் குடும்பநலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் அவசர மருத்துவ உதவிக்காக கடந்த 2008ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் 21 ஆம்புலன்ஸ்களுடன் தொடங்கிய சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது அதிநவீன உயிர்காக்கும் மருத்துவ வசதிகளுடன் 300 ஆம்புலன்ஸ் வாகனங்கள், பச்சிளம் குழந்தைகளுக்கென 175 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 74 பைக் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 923 ஆம்புலன்ஸ்கள் முதலுதவி சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவன நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 500 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், போதிய எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பற்றாக்குறையால், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் 180 நோயாளிகளுக்கு குறைவாக வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் கிராமபகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், கூடுதல் எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கூடுதல் எண்ணிக்கையில் சுமார் 1000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும் என்று சுகாதாரத்துறை கடந்த ஆண்டு அறிவித்தது. அதற்கான, டெண்டர் விடப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, 2ம் கட்டமாக சுமார் 1000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாரிக்க ஒப்பந்தம் மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.

உயர்தர தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களுடன் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள போர்ஸ் கம்பெனியின் வாகன தயாரிக்கும் மையத்தில் தயாராகி வருகிறது. இதேபோல் தனியார் சர்வதேச தொழில்நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடனும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமம் முதல் பெருநகரம் வரை தடையின்றி ஆம்புலன்ஸ் சேவையை வழங்க முடியும். விரைவில் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்கள் சேவைக்காக கொண்டுவரப்பட உள்ளது’ என்றனர்.

Tags : villages ,Tamil Nadu , Village, ambulance, work intensity
× RELATED கொல்கத்தாவில் 2 மாத ஊரடங்குக்கு பின்...