பாண்டி முனியாக மாறிய தொழிலதிபர்: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு அருள்வாக்கு

போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருபவர் ரமேஷ். தொழிற்சாலைக்கு வந்து அலுவலக வேலைகளில் மூழ்கிவிட்டால் நேரம் போவதே தெரியாமல் தொழிலே கதி என மூழ்கி கிடந்தார். இந்நிலையில் தினமும் இரவில் மதுரை பாண்டிமுனி அவரது கனவில் வந்தாராம். இதனால் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த ரமேஷ் உடனே, மதுரை பாண்டி கோயிலுக்குச் சென்று அங்குள்ள பூசாரிகளிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள், உங்கள்  இருப்பிடத்திலேயே மதுரை பாண்டிமுனியின் சிலையை சாஸ்திர சம்பிரதாயங்களுடன் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அவர் இனி உங்கள் கனவில் வரமாட்டார் என யோசனை தெரிவித்தனர்.

அதன்படியே தனது இருப்பிடம் மற்றும் அலுவலக வளாகத்திலேயே மதுரை பாண்டிமுனிக்கு ஆகம விதிகளின்படி சந்தன சிலை வடித்த ரமேஷ், அதனை நிறுவி அத்துடன் சுமார் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று, விழா தொடங்கிய வேளையில் மதுரை பாண்டிமுனி தனது திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது தனது கனவில் எந்த பாண்டிமுனி வரக்கூடாது என்று சிலையை வைத்து பூஜைகள் செய்தாரோ அந்த பாண்டிமுனியே ரமேஷின் உடலிலேயே புகுந்துகொண்டது.

முற்றிலும் சாதுவான தொழிலதிபர் ரமேஷ், மதுரை பாண்டிமுனி உடலில் புகுந்த மறுநொடியே ஆக்ரோஷமாக மாறினார். அவரது உடலில் பாண்டிமுனி புகுந்து கொண்டதை அறிந்த விழாவிற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து வணங்கினர். உடனடியாக ரமேஷ் அனைவருக்கும் கையில் எலுமிச்சம்பழம் கொடுத்து அவர்களது நெற்றியில் விபூதி இட்டு அருள்வாக்கு கூற தொடங்கினார். அனைவரது இறந்த காலம் மற்றும் எதிர்காலம் குறித்து, ரமேஷ் புட்டு புட்டு வைத்ததால், அங்கு திரண்டிருந்த சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோரும் அவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

காலை 8 மணிக்கு அருள்வாக்கு கூற தொடங்கிய ரமேஷ், இரவு 7 மணி வரை தொடர்ந்து நின்றுகொண்டே சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் அருவாக்கு கூறியது பக்தர்களை பரவசத்தில் மட்டுமல்ல ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது.
வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கும் ரமேஷ், திடீரென மதுரை பாண்டிமுனியாக மாறியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை பாண்டி முனியே, ரமேஷின் உருவில் நேரில் வந்து தங்களுக்கு அருள் பாலிப்பதாக இப்பகுதி மக்கள் ஆனந்தத்துடன் கூறினர்.

Tags : Businessman ,Pandi Muni , Bondi munai, bless
× RELATED துபாயில் மேல்படிப்புக்காக வந்த...