×

ஆந்திராவில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

அமராவதி: ஆந்திராவில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இன்று பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 5.13 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.

ஆந்திரா மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ஆற்றுச்சுழலில் சிக்கிய அந்த கச்சுலூரு பகுதியின் அருகில் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றி, கரை சேர்த்தனர். மேலும் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகின. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நிவாரணம்

இதனை தொடர்ந்து ஆந்திராவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகள் விரைந்து முடிக்கவும்  உத்தரவிட்டார். அனைத்து படகு சேவைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோதாவரி நதியில் படகு நடவடிக்கைகள் குறித்த உரிமங்கள், மற்றும் பிற விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில் ஆற்றில் படகு கவிழ்ந்து 11-பேர் இறந்த சம்பவத்துக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவிக்கிறேன். துயர நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Tags : boat accident ,Andhra , Andhra, Boat Accident, PM Modi, condolences
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...