பொதுமக்களின் நலன்கருதி மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா?

மானாமதுரை: மானாமதுரை வழியாக செல்லும் மதுரை, ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் குறைவான பெட்டிகளுடன் இயங்குவதால் இடையில் உள்ள ஊர்களில் இருந்து மதுரை ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என மானாமதுரை பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகழ் பெற்ற மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புனித தலங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மதுரை, ராமேஸ்வரம் இடையே காலை 5.30 மணிக்கும் மதியம் 12 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் இரு மார்க்கங்களிலும் பயணிகள் ரயில்கள் இயக்கி வருகிறது.

அகலரயில் பாதை பணிகளுக்கு பின் பயணிகள் ரயில் முதலில் வெறும் ஆறுபெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் பஸ் கட்டண உயர்விற்குப்பின் 10 பெட்டிகளுடன் இயங்கியது. நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 13 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தி வருவதால் வழக்கமான நாட்களில் கூட கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மதுரை-ராமேஸ்வரம் இடையே உள்ள மானாமதுரை, திருப்புவனம் பகுதிமக்களுக்கு அமர்ந்து செல்ல பெட்டியில் இடமில்லை.

வேறுவழியின்றி கழிவறைகளிலும், சரக்கு பெட்டிகளிலும் பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சரக்கு பெட்டியில் கழிவறை இருப்பதில்லை இதில் பயணம் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் செய்யும் அவலம் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் சிவா கூறுகையில்,‘‘மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில்களில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த ரயிலில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்க வேண்டும் என கட்டாயமாகியுள்ளது.

ஆனால் மானாமதுரையில் இருந்து செல்லும் பயணிகள் அமர்ந்து செல்ல இவற்றில் இடம் கிடைப்பதில்லை. மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில்களில் தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதை போல மதுரை, ராமேஸ்வரம் பயணிகள் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: