இது சுதந்திர காலத்து கோரிக்கை பல்லாண்டுகளாக பாதை வசதிக்கு பரிதவிக்கும் ராசிபுரம் போதமலை

* தேர்தலுக்கு மட்டுமே வலம் வரும் வாக்குறுதி

* முடிவு வந்தவுடன் வைப்பதோ முற்றுப்புள்ளி

ராசிபுரம்:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்மன்ற தொகுதிக்குட்பட்டது வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் இருக்கிறது போதமலை கிராமம். 1003 அடி உயரம் கொண்ட இந்த மலைபகுதி,  ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த பகுதியில் கீழூர், மேலூர், நடுக்காடு, நடுவளவு, தெற்குகாடு, குறிஞ்சூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 1300 வாக்காளர்களை கொண்ட போதமலையில், 650குடும்ப அட்டைகள் உள்ளது. ஆனால் மலைபகுதியில் ரேசன் கடைகள் இல்லை. ரேஷன் வாங்க வேண்டுமென்றால் மலையின்  கீழ்  பகுதிக்கு வரவேண்டும். இந்த பகுதிக்கு முறையான சாலை வசதி, மின்சார வசதி அமைத்து தரவேண்டும் என்று சுதந்திர காலம் தொட்டே, மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சாலை வசதி மட்டுமல்ல, மின்வசதியும்  இங்கு இல்லாமல் இருந்தது. ஒரு முறை நடந்த ஒட்டு மொத்த ேதர்தல்  புறக்கணிப்பு போராட்டத்திற்கு பிறகு, 2006ம் ஆண்டு வாக்கில் மின்வசதியை  ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுத்தனர். ஒரு கட்டத்தில் தேர்தலை புறக்கணிப்போம்  என்று அறிவித்த பின் திரும்பி பார்த்த அதிகாரிகள், அரசியல் வாதிகள் முதல்  கட்டமாக மின்சார வசதிகளை ஏற்ப்படுத்தி தர முடிவெடுத்து 2006ம் ஆண்டு  அதற்க்கான பணிகள் துவங்கியது. 2011ம் மின்வசதி கிடைத்தது.  

இது ஒருபுறமிருக்க, ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் பகுதியிலிருந்து மேலூர், கீழுர் பகுதிகள் சுமார் 24கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மலைப்பாதை வழியாகதான் மலையில் சாகுபடி செய்யப்படும் சாமை, கேழ்வரகு, தினை, வரகு, நெல், கம்பு, வாழை, பலாப்பழம், உள்ளிட்ட உணவு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யவேண்டும். இதுதான் போதமலை பகுதி மக்களின் வாழ்வாதாரம். ஆனால் பாதை வசதி இல்லாததால், போதமலையில் இருந்த பலர், வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

இதன்பிறகு இப்பகுதி மக்கள் கையில் எடுத்தது ேதர்தல் புறக்கணிப்பு போராட்டம். இதை உணர்ந்து கொண்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ‘நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் பாதை வசதி அமைத்து தருவோம்’ என்பதை பிரதான வாக்குறுதியாக வைத்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அந்த வாக்குறுதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். அதன் பிறகு ஜெயித்தவர்களும், தோற்றவர்களும் இதை கண்டு கொள்வதேயில்லை. ஒரு கட்டத்தில் அரசையும், அதிகாரிகளையும் நம்பாமல் இங்குள்ள இளைஞர்களே ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர். இதேபோல் மருத்துவம், குடிநீர், பள்ளிக்கூடம் என்று எந்த வசதிகளும் இல்லாத நிலையே இங்கு நீடிக்கிறது. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு இடையே பல்லாண்டுகளாக பாதை வசதிக்காக பரிதவித்து நிற்கிறது போதமலை. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்து கண்ணீர் வடிக்கின்றனர் இங்குள்ள மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள்.

செயல்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதாரநிலையம்

கந்தசாமி கூறுகையில், ‘‘போதமலை பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த சுகாதார நிலையம் கல்லாங்குளம் பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. மலைகிராமத்தில் மாதம் ஒரு முறையாவது மருத்துவ முகாம் நடத்துவார்கள். அதுவும் நடத்துவது கிடையாது.  வடுகத்தை தலைமையிடாமாக கொண்ட மலை கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. கடந்த காலங்களில் செயல் பட்டது. தற்போது செயல் படவில்லை. திறந்த வெளி கழிப்பிடமே இல்லை என்று அறிவிக்கும் மாவட்டத்தில் போதமலை பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லை. சாலைவசதி, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் வெளியிடங்களுக்கு இடம் பெயர தொடங்கினர்,’’ என்றார்.

Related Stories: