பங்குத்தொகை தராமல் தமிழக அரசு அலட்சியம் பழநி - ஈரோடு அகல ரயில் திட்டம் இழுபறி

* இரு மாவட்ட வர்த்தகம் வளர்ச்சியடையும்

* மலைக்கோயில் பக்தர்களுக்கு பலனளிக்கும்

பழநி: பங்குத்தொகை தராமல் இழுத்தடிக்கப்படுவதால் பழநி - ஈரோடு அகல ரயில்பாதை திட்டம் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயிலான தண்டாயுதபாணி சுவாமி கோயில் பழநி நகரில் உள்ளது. இந்நகருக்கு தற்போது திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில் பாதை திட்டத்தின் மூலம் அகல ரயில்பாதை வசதி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி ஏற்பட்டுள்ளது. இதுபோல் 100 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடக்கும் பழநி - ஈரோடு அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றினால் வடமாநிலங்களில் உள்ள பக்தர்களும் பழநி கோயிலுக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பெட்ஷீட், கம்பளி, எண்ணெய் வித்துக்கள், மானாவாரி பயிர்கள், விசைத்தறிகள் பொருட்கள் போன்றவற்றை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்றதாய் இருக்கும் திட்டம் என்பதால் இத்திட்டம் 3 மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 100 ஆண்டுகால கனவுத்திட்டமாக விளங்கிய பழநி - ஈரோடு அகல ரயில் பாதை திட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி சர்வே பணிகள் துவங்கப்பட்டு, பழநி, தொப்பம்பட்டி, தாராபுரம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக ஈரோட்டை அடையும் வகையில் 91.5 கிமீ தொலைவில் வழித்தடம் திட்டமிடப்பட்டது.

6 பெரிய பாலங்களும், 42 சிறுபாலங்களும் கட்டப்பட்டு 2008ல் சுமார் ரூ.364 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கடந்த 2008, டிச.22ம் தேதி இத்திட்டத்திற்காக பூமி பூஜை நடந்தது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக அப்போதே ரூ.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு 50 சதவீதம் மாநில அரசு பங்குத்தொகையாக வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் இத்திட்டம் நிறைவேற எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. பங்குத்தொகை வழங்குவது தொடர்பாக சிந்தனையும் செய்யவில்லை. இதனால் இத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து பழநி - ஈரோடு ரயில்வே மக்கள் பணிச்சங்க பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி கூறியதாவது:இத்திட்டம் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 60 லட்சம் மக்களின் 100 ஆண்டுகால கனவாகும். இதற்காக கடந்த 67 வருடங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. சர்வே பணிக்காக ரூபாய் 69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 கட்டமாக சர்வே பணிகள் நடந்து முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி இத்திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்ய ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டமும் முடக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாஜக மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடம் பல்வேறு மனுக்களை வழங்கி விட்டோம். இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்குத்தொகையாக திட்டமதிப்பீட்டில் 50சதவீதம் தொகையை வழங்க வேண்டும். ஆனால் நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்து தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என பல்வேறு காரணங்களைக் கூறி அதிமுக அரசு இத்திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளது. பல்வேறு இலவசங்கள், எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு போன்றவைகளுக்கு தாராளம் காட்டு தமிழக அரசு 60 லட்சம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் கூறும்போது, ‘‘இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழநி கோயிலுக்கு வடமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். தற்போது திண்டுக்கல் மாவட்ட மக்கள் வடமாநிலங்களுக்குச் செல்ல கோவை மற்றும் மதுரை ரயில்நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் ஏராளமான வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்க வழிவகை ஏற்படும். திமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக அரசு பங்குத்தொகையை வழங்காமல் இழுத்தடித்து, திட்டத்தை முடக்க பார்க்கிறது. அரசியல் லாபத்தை மறந்து ஆளும் அரசு 3 மாவட்டங்களில் வசிக்கும் 60 லட்சம் மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் பங்குத்தொகையை வழங்க முன்வர வேண்டும். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசுவேன்’’ என்றார்.

* பழநி வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சத்யா கூறும்போது, ‘‘ரயில்வே திட்டங்களில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில் திட்டங்களில் போதிய நன்மைகள் கிடைக்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வர வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவிற்குக்கூட ரயில்வே திட்டங்களில் தேவையான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ரயில்வேதுறைக்கு அதிக லாபம் ஈட்டி தரும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஏமாற்றத்தையே பரிசாக தருகிறது. தமிழக அரசும் தனது பங்குத்தொகையை தர முன்வர வேண்டும். 3 தவணைகளாகக் கூட தர முன்வரலாம். இத்திட்டம் நிறைவேறினால் 3 மாவட்ட மக்களின் தொழில்கள் வளர்ச்சி அடையும்’’ என்றார்.

தனியார் பஸ் நிறுவனங்கள் ஆர்வம்...?

* பழநி-ஈரோடு அகலரயில்பாதை திட்டம் போன்றவற்றை நிறுத்த தனியார் பஸ் நிறுவன முதலாளிகள் அதீத ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது பழநியில் தாராபுரம், திருப்பூர், ஊதியூர், காங்கேயம், வெள்ளகோயில், சென்னிமலை, ஈங்கூர், ஈரோடு போன்ற ஊர்களுக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடி ரயில் அல்லது இணைப்பு ரயில்கள் மூலம் இவ்வூர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று விட முடியும். இதனால் இவ்வழித்தடங்களில் செல்லும் தனியார் பஸ்களுக்கு போதிய கூட்டம் இருக்காது. லாபம் குறையும். இதனால் சில பஸ் கம்பெனி முதலாளிகள் இத்திட்டத்தை முடக்கி வைக்க ரயில்வே அதிகாரிகள், ஆளும் தரப்புகளை ‘கவனிப்பு’ செய்துதள்ளதாக கூறப்படுகிறது.

1952ல் துவங்கிய போராட்டம்

* 100 ஆண்டுகால கனவுத்திட்டமாக இருந்து வரும் பழநி-ஈரோடு அகலரயில்பாதை திட்டத்திற்கான முதல் போராட்டம் 1952ம் ஆண்டு துவங்கியது. போராட்டத்தை துவக்கியவர் அப்போதைய பிரஜா சோஷலிஸ்ட் இயக்க நிர்வாகியும், தமிழக விவசாயிகள் சங்க தலைவருமாக இருந்த தற்போதைய திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, குளத்துபாளையத்தைச் சேர்ந்த லிங்கசாமி என்பவர் ஆவார். 1999ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி லிங்கசாமி உயிரிழந்து விட, தற்போது அவரது மகன் சின்னச்சாமி போராட்ட களத்தில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார். பழநி-ஈரோடு அகலரயில்பாதை மக்கள் பணிச்சங்கம் எனும் அமைப்பு துவங்கப்பட்டு, விவசாயிகள், ஆன்மீகவாதிகள், இளைஞர்கள், தொண்டு அமைப்புகள் இதன் உறுப்பினர்களாக இருந்து தற்போது கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம், மனு அளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: