கும்பகோணத்தில் பலத்த மழை கோயில்களில் தண்ணீர் புகுந்தது: மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் வீடுகள், கோயில்களில் தண்ணீர் புகுந்தது. மின்பழுது பார்த்து கொண்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகலில் கடுமையான வெயில் அடித்து வந்தாலும், இரவில் பெய்யும் மழையினால் கும்பகோணம் பகுதி வெப்பம் தணிந்து வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கனத்த மழை கொட்டி தீர்த்தது.இதனால் பீமன் தெருவிலுள்ள சுமார் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் தங்களது உடைமைகளை கட்டில் மேல் போட்டும், முதியவர்களையும் மற்றொரு கட்டில் அமர வைத்தனர். விடிய, விடிய தூங்காமல் இருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.இதேபோல் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் மழைநீர் புகுந்ததால், பிரகாரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கொடிமரத்திற்கு முன் உள்ள நந்தி சிலை தண்ணீரில் மூழ்கியது. மழைநீர் புகுந்தாலும், பக்தர்கள், தண்ணீரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலின் முன்புறம் உள்ள நந்தி மண்டபம் சுற்றிலும் மழை நீர் தேங்கியதால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கோயில் பிரகாரத்திலும் மழைநீர் தேங்கியதால், பக்தர்களின் கோயிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினர்.

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி:கும்பகோணத்தை அடுத்த ஏராகரம், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி கோகிலா.செல்வம் சுவாமிமலை மின்சார பிரிவு அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை சுவாமிமலை அருகேயுள்ள கோனக்கரை பகுதியில் மின்சாரம் பழுது ஏற்பட்டதால், லைன் மேன் பாலகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர்கள் செல்வம், அய்யப்பன் ஆகியோர் சரிசெய்ய சென்றனர்.அங்கு மின்கம்பத்தில் ஏறி செல்வம், பழுது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார், செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான தற்காலிக பணியாளர் செல்வம் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு கேட்டு, அவரது மனைவி கோகிலா மற்றும் உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: