பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு அக்.1ம் தேதி ‘50 வயது’: பொன்விழா போட்டிகளில் பங்கேற்க ரெடியா?

மதுரை: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பொன் விழாவை முன்னிட்டு கட்டுரை மற்றும் காணொளி போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி விடுத்துள்ள அறிக்கை: மதுரை - சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் விரைவு ரயிலானது, தெற்கு ரயில்வேயில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரயிலாகும். இந்த ரயில் கடந்த, 1969ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் அக்.1ம் தேதி பாண்டியன் விரைவு ரயில், தனது 50 ஆண்டுகள் பயண சேவையை நிறைவு செய்கிறது.இதனை வரும் அக்.1ம் தேதியை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பொன் விழாவாக கொண்டாட தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் முடிவு செய்துள்ளது. இதனையொட்டி பயணிகள் பங்கேற்கும் வகையில் கட்டுரை மற்றும் காணொளி போட்டிகளை நடத்தி, அவர்களின் அனுபவங்களை பெற்று, பாண்டியன் எக்ஸ்பிரசின் சேவையை மெருகூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள், பயணத்தின்போது நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். இப்போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான கட்டுரை 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும், போட்டிக்கான காணொளி 90 வினாடிகள் காணக்கூடியதாகவும் (60-75 வினாடிகள் ரயில் பயண அனுபவம் குறித்தும், 30-15 வினாடிகள் யுடிஎஸ்-மொபைல் ஆப் உபயோகம் குறித்தும்) இருக்கவேண்டும். பயணிகள் தங்களுடைய அனுபவங்களை, pandianexpress1969@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது மதுரை ரயில்வே அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் காணொளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்படும். பயணிகளுடைய அனுபவங்கள் பாண்டியன் ரயில் சேவையை மேலும் மெருகேற்ற உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: