காங்கயம் காளைகளுக்கு புதிய சந்தை துவக்கம்

காங்கயம்:காங்கயம் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுதாவணியில் வாரந்தோறும் காங்கயம் இன காளைகளுக்கான புதிய சந்தை  நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் மாடுகளுக்கான சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும்  நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று காளைகள் மட்டும் பங்கேற்கும் சந்தை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் விற்பனைக்கு வந்திருந்தன.விவசாய தேவைகளுக்கும், பால் உபயோகத்திற்கும் காங்கயம் மாடுகள் சிறப்பு பெற்றவை. மேற்கு மண்டலங்களில் நடக்கும் திருமணங்களில் பெண்களுக்கு காங்கயம் மாடுகளை சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. இவ்வளவு சிறப்புமிக்க காங்கயம் மாடுகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கயம் அருகே உள்ள பழைய கோட்டையில் காங்கயம் மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் பல மாவட்டங்களிலிருந்து மாடுகள் வாங்கவும் விற்கவும் விவசாயிகள் வருகின்றனர். இதேபோன்று காங்கயம் எருதுகள், பொலி காளைகள், ரேக்ளா காளைகள்,  ஜல்லிகட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு சிறப்பு சந்தை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். சந்தையின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இச்சந்தையை முன்னாள் எஸ்.பி.யும், விவசாயியுமான சின்ன தாராபுரத்தை சேர்ந்த அண்ணாமலை குப்புசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் 100 மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் விற்பனைக்கு  வந்திருந்தன.  காளைகளை வாங்குதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து  விவசாயிகள் வந்திருந்தனர். ஒரு ஜோடி ரேக்ளா காளைகள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பூச்சிக்காளை ரூ.1.25 லட்சத்துக்கு விற்றது. நேற்று ஏராளமான விவசாயிகள் சந்தைக்கு வந்திருந்தனர். காளைகளுக்கான புதிய சந்தை காளை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: