சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் அரம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.இந்த ஆலை மீதும்,குராயிஸ் நகரில் உள்ள ஆலை மீதும், நேற்று(செப்.,14) காலை ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால், சுத்திகரிப்பு ஆலையிலும், எண்ணெய் வயல்களிலும் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை, அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அங்கு ஏற்பட்ட புகை மண்டலம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளது. இந்த ஆலையில், தினமும் 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போதுவரை 5 மில்லியன் பேரல் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிப் படையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதற்கு எந்த ஆதாரமுமில்லை என்றும், ஈரான்தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: