பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்: அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை முழங்கியவர். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போதித்தவர். சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ராமசாமியின் வழித்தோன்றலாக கருதப்படுபவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தின் திராவிட அரசியலின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.

அவரது 111ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றார். அப்போது அவருக்கு திமுக சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை அடுத்து அண்ணாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். சென்னையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவிக்கும் விழாவுக்கு அதிமுக கட்சிக் கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்ததால் கொடிகள், பேனர்கள் வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

Related Stories: