திருமண தடை, கடன், குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக கூறி 30 பெண்களிடம் 150 சவரன் அபேஸ் போலி பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி

* 21 நாட்கள் சிறப்பு கலச பூஜை என நாடகம்

* நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை

சென்னை: திருமண தடை, கடன் பிரச்னை, குழந்தை இல்லாத பிரச்னையை தீர்க்க சிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி 150 சவரன் அபேஸ் செய்த போலி பூசாரியை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் அம்பலமாகியது. இது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அமைந்தகரை பொன்னுவேல் தோட்டம் 5வது தெருவில் உள்ள முத்து கருமாரியம்மன் கோயிலில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (25) என்பவர் கடந்த 10 ஆண்டாக பூசாரியாக உள்ளார். இவர், இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பூசாரி ஆனந்தன்,  கோயிலுக்கு வரும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களது குடும்ப பிரச்னைகளை தெரிந்து கொண்டார். பின்னர், திருமண தோஷம், கணவன், மனைவி பிரச்னை, குழந்தையின்மை, கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தினால் தீர்வு காணலாம், என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய பெண்கள், ஒவ்வொரு நாளும் பூசாரியிடம் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். அப்போது அவர், ‘‘வீட்டில் இருக்கும் நகைகளை ஒரு கலசத்தில் வைத்து தேங்காய், பூ பழத்துடன் கொண்டு வர வேண்டும்’’ என பெண்களிடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெண்கள் கொண்டு வந்ததும் ஆனந்தன், அதை சாமி அருகில் வைத்து பூஜை செய்வார். மேலும், கலசத்தை கொண்டு வந்தவர்களிடம், ‘‘வீட்டிற்கு சென்று 150 அரிசியை எண்ணி எடுத்து வாருங்கள்,’’ என கூறியுள்ளார். அவர்களும் பூஜைக்காக என்று நினைத்து, வீட்டில் இருந்து 150 அரிசியை எண்ணி எடுத்து வருவர். பிறகு கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், பூஜை முடிந்தபின் கலசத்தை 21 நாட்கள் கோயிலிலேயே வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, 21 நாட்கள் கழித்து வந்து கலசத்தை பெற்றுச் செல்பவர்களிடம், ‘‘வீட்டில் 21 நாட்கள் திறந்து பார்க்காமல் வைத்து பூஜை செய்யுங்கள். இடையில் திறந்து பார்த்தால் ஆபத்து’’ என்று கூறியுள்ளார். அதன்படி, பெண்கள் 21 நாட்கள் கழித்து திறந்து பார்த்தபோது, அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பூசாரியிடம் கேட்டபோது, ‘‘நீங்கள் முழு பக்தியுடன் பூஜை செய்யவில்லை. அதனால் தான் நகை மாயமாகியுள்ளது,’’ என்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அக்கம் பக்கத்தில் இதுபற்றி தெரிவித்தபோது, சுமார் 30 பெண்களிடம் 150 சவரன் நகைகளை பூசாரி ஏமாற்றியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்து, பூசாரியிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘இன்னும் 48 நாட்கள் பூஜை முடிந்தபின் நகைகளை தருகிறேன்,’’ என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பூசாரியை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து அமைந்தகரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தனை கைது செய்தனர். விசாரணையில், போலி பூசாரி ஆனந்தன், கலசத்தில் இருந்த நகையை எடுத்து அடகு வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அவர், பெண்களிடம் ஏமாற்றி வாங்கிய நகைகளை எந்தெந்த அடகு கடைகளில் அடமானம் வைத்துள்ளார் என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அமைந்தகரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: