×

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: ஹவுதி படையினர் மீது சந்தேகம்

துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலை ஏமனில் போராடி வரும் ஹவுதி படையினர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நடக்கிறது. அரசுக்கு எதிராக ஹவுதி என்ற அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை கடந்த 2015ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் சப்ளை செய்து வருகிறது.

இதனால், சவுதி அரேபியா மீது, ஹவுதி அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவற்றை பேட்ரியாட் ஏவுகணைகள் மூலம் சவுதி அரேபிய ராணுவம் நடுவானில் சுட்டு அழித்து வந்தது. இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ தொலைவில் புக்யக் என்ற இடத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் மீதும், குரைஸ் எண்ணெய் வயல் மீதும் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலில் யாரும் காயம் அடைந்தனரா அல்லது எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதா என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஈரான் வழங்கிய டிரோன்களை பயன்படுத்தி ஹவுதி அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான் உலகிலேயே மிகப்பெரியது. இந்த தாக்குதலால் வளைகுடாவில் பதற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, உலக நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என கூறியுள்ளது. இதனால் சவுதி அரேபியா மற்றும் இதர வளைகுடா நாடுகள், பிறநாடுகளின் கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்றி வருகின்றன. இதனால், இந்த தாக்குதலின் பின்னணியில் ஹவுதி அமைப்பினரும், ஈரான் அரசும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி:
ஹவுதி அமைப்பினர் சமீபகாலமாக பயன்படுத்தும் எக்ஸ் வகை டிரோன்கள் 1,500 கி.மீ தூரம் செல்லும் திறன் வாய்ந்தவை என ஐ.நா விசாரணையாளர்கள் கூறியுள்ளனர். இவற்றின் மூலம் சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் மீது ஹவுதி அமைப்பினரால் எளிதில் தாக்குதல் நடத்த முடியும். இந்த தாக்குதல் குறித்து ஹவுதி அமைப்பினரின் செயற்கைகோள் செய்தி சேனல் அல்-மசிரா எந்த தகவறலும் தெரிவிக்கவில்லை. ஆனால், மிகப் பெரிய தாக்குதல் நடத்துவது குறித்து ஹவுதி படையின் செய்தி தொடர்பாளர் விரைவில் உரை நிகழ்த்துவார் என மட்டும் கூறியுள்ளது.

Tags : Saudi ,drone strike ,oil refinery , Saudi Arabia, Crude Oil, Refinery, Drone Attack, Houthi Force, Suspicion
× RELATED கேரள புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு சவுதியில் பலி