அடுத்த 10 வருடங்களில் புதிய தொழில்நுட்பங்களால் காணாமல் போகும் தொழில்கள்

துபாய்: பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப தினந்தோறும் புதிய தொழில் நுட்பங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. தகவல் பரிமாற்றத்தில்  கடிதம், தந்தி, பேக்ஸ், பேஜர் என பல காணாமல் போய் விட்டன. தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தொலைபேசியாக தொடங்கி இன்று ஸ்மார்ட் போனாக வளர்ச்சியடைந்து மனித கைகளில் ஸ்கிரீனை நிறுவும் அளவில் தொழில்நுட்பம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. புகைப்பட பிரின்டிங் துறையில் பணியாற்றிய பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

நாடகமாக இருந்த கலையை தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சினிமாவாக பெருந்திரையில் மட்டுமே கண்டு கொண்டிருந்தோரை விசிஆர் என வீட்டுக்குள் கொண்டு வந்து சிடி என வட்டமாக்கி தற்போது பேனா முனையளவில் அடக்கி முழு சினிமாவையும் காண முடியும் என்ற நிலை வந்துவிட்டது. குதிரையில் தொடங்கிய வேக பயணம் குழாய் வடிவிலான ஹைப்பர் லூப் வடிவில் அதிவேக தொழில்நுட்பமாக வளர்ந்து நிற்கிறது. ஓட்டுநர்களோடு தற்போது இயங்கும் வாகனங்கள் எதிர்க்காலத்தில் ஆளில்லாமல் இயங்கப்போகின்றன. அதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் ஓட்டுநர் பணிக்கான அவசியம் இல்லாமல் போய் விடும்.

இவ்வகை வாகனங்களால் விபத்துக்கள் குறையும் என சொல்லப்படுகிறது. விபத்துக்கள் குறையும்போது விபத்து இன்சூரன்சுக்கான வாய்ப்புகள் குறையும். சட்டத்துறை, மருத்துவத் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள் பெருகும்போது இது தொடர்பான தேவைகளுக்கு மனித ஆற்றல் தேவை குறையும். இப்படியாக சங்கிலி தொடராக மாற்றங்கள் இடம்பெறுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும்போது அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டோர் வேலைவாய்ப்பினை இழக்கிறார்கள். அதனை உள்வாங்கி கொள்ளாத நிறுவனங்கள் செயல் இழக்கின்றன. ஆனால் புதிய தொழில் வாய்ப்புகள் ஏராளமானவை உருவாகிறது.

அதனை முன்கூட்டியே அறிந்து உணர்ந்து தயார் படுத்தியோர் வாய்ப்பினை பயன்படுத்தி வளம் பெறுகிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்புள்ள துறைகள் என கருதப்படும் ஆளில்லா வாகனத்துறை, செயற்கை நுண்ணறிவு துறை, விண்வெளி சுற்றுலா, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்களின் தகவல் உள்ளிட்ட தகவல் சேமிப்பு தொடர்பான தொழில், 3டி பிரின்டிங் துறை வளர்ச்சி பெறும். தற்போது நிலவும் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலை தொடருமானால் எதிர்க்காலத்தில் பூமியில் நீர், சுத்தமான காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இதற்கான மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் விண்வெளியில் வேற்று கோள்களிலிருந்து இயற்கை வளங்களை பூமிக்கு கொண்டு வருவது அல்லது பூமியிலிருந்து மனிதன் வாழ தகுதியுடையை கோள்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கான ஆய்வு தொடர்பான தொழில்கள் வரவேற்பை பெறும். மருத்துவ துறை வெகு வேகமாக நவீன மயமாகி வருகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உடல்களின் செயற்கை மாற்று உறுப்புகள் அவசியமாகிறது. எதிர்காலத்தில் மனித செயற்கை உறுப்பு தயாரிப்புக்கான துறை அபரிமிதமாக வளர்ச்சியடையும்.

திருமண ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான துறைகள், அடைக்கப்ப்பட்ட சுத்தமான காற்று, வாகன சார்ஜிங் நிலையங்கள் (பெட்ரோலுக்கான மாற்று), மனித டி.என்.ஏ வடிவமைப்பு நிறுவனங்கள், ஜெட் பேக் எனப்படும் மனித உடலில் இறக்கை போன்று அணிவித்து வானில் பறக்கும் வாகன தொழில், தனி மனித உரிமை பாதுகாப்பு நிறுவனங்கள், ரோபோடிக் துறை, ஸ்டெம் செல் பார்மசி, வெர்டிக்கல் வேளாண்மை  துறை, நீர் வர்த்தகம், ஓய்வு பெற்றவர்களுக்கான சேவைகள், சமூக ஊடக ஆலோசனை துறை, மாற்று மொழி பெயர்ப்பு சேவைகள், ஆன்லைன் மூலம் பழுது பார்ப்பு சேவைகள், மாற்று எரிபொருள்களான சோலார், பயோ உள்ளிட்ட எரிபொருள்கள் உற்பத்தி துறை, பவர் சேமிப்பு வணிகம், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் மாற்று எரிபொருளில் வாகன உற்பத்தி துறை,

காற்றாலை ஆற்றல் துறை, இயற்கை சார்ந்த ஆரோக்கியத்திற்கான துறைகள், உலகில் பல்வேறு இடங்களுக்கு மனிதர்கள் இடம்பெயர்வதற்கான சேவைகள், வயதானவர்களை மற்றும் நோயாளிகளை கவனித்து கொள்வதற்கான சேவைகள், விவசாயம் சார்ந்த உணவு உற்பத்தி துறை என 50 க்கும் மேற்பட்ட தொழில் துறைகள் அடுத்த பத்து வருடங்களில் முக்கிய பங்ககு வகிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வேற்று கோள்களிலிருந்து இயற்கை வளங்களை பூமிக்கு கொண்டு வருவது அல்லது பூமியிலிருந்து மனிதன் வாழ தகுதியுடையை கோள்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கான ஆய்வு தொடர்பான தொழில்கள் வரவேற்பை பெறும்.

Related Stories: