மு.க.ஸ்டாலினை பார்த்து விரலை நீட்டும் தகுதி அமைச்சர் சம்பத்துக்கு இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான க.பொன்முடி நேற்று வெளியிட்ட அறிக்கை: “முதலீடுகள் எங்கே” என்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளாத தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் “எங்கள் தலைவர் வெற்றுக் கூச்சல் போடுகிறார்” என்று கூறியிருப்பதற்கும், அரசு செய்தி வெளியீடு என்பதை அரசியலுக்காகப் பயன்படுத்தும் அதிகார அத்து மீறலுக்கும், துஷ்பிரயோகத்திற்கும், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

எம்.சி.சம்பத், எங்கள் தலைவரைப் பார்த்து கண்டன அறிக்கை விடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஆகவே இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு “சொந்தக் கட்சி மாநாடுகள்” போலவும், “வெளிநாட்டுப் பயணம்” ஒரு சுற்றுலா போலவும் உல்லாசமாக நடத்தி, தொழில்துறையை படு பாதாளத்தில் தள்ளி விட்டது அதிமுக ஆட்சி. திமுக ஆட்சியில் “ஆக்ஸ்போர்டு அனால்டிகா” என்ற நிறுவனம் இந்திய அளவில் ஆய்வு நடத்தி, “இந்தியாவிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்ற முதன்மை மாநிலம் தமிழகம்” என்று பாராட்டியது. அமைச்சர் தன் சொந்த ஊருக்கு செல்லும் போது தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையுள்ள தொழிற்சாலைகள் திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

அமைச்சர் வீட்டிலிருந்து மத்திய கைலாஷைத் தாண்டிச் சென்றார் என்றால், அவர் கண்ணில் படும் “டைடல் பார்க்” திமுக ஆட்சியின் சாதனை. ஏன் “ஒற்றைச்  சாளர முறையில் விரைந்து தொழில் தொடங்கும் அனுமதி வழங்க” தனியாகச் சட்டமே கொண்டு வந்தது கலைஞர் முதலமைச்சராகவும், எங்கள் தலைவர் தொழில்துறையைக் கவனிக்கும் துணை முதலமைச்சராகவும் இருந்த திமுக ஆட்சி! இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் “அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும்”, “பூனை கண்ணை மூடிக்கொண்டால்” என்ற நிலையில் இருக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு எங்கள் தலைவரைப் பார்த்து, சுட்டு விரலை நீட்டும் தகுதி அறவே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: