காவிரி ஆற்றின் குறுக்கே 5 அணை கட்ட நடவடிக்கை ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமிக்க ஓய்வு பெற்ற பொறியாளர் குழு: அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே 5 அணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமிக்க ஓய்வு பெற்ற பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஏராளமான புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் ஆதாரமாக இருக்கின்ற சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவு திறனை அதிகரிப்பதற்காக தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    

ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே 428 கோடி ரூபாய் செலவில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காவேரி ஆற்றின் குறுக்கே அதிமுக அரசு 5 அணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய நீர் தேக்கத்தினால் 1 டி.எம்.சி. நீர் சென்னை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. பல நாள் கனவாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமித்து பயன்படுத்த, ஓய்வுபெற்ற அனுபவம் மிக்க பொறியாளர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரைக்கும் அரிய பல நீர் மேலாண்மை திட்டங்கள் அரசால் செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: