அமலாக்கத் துறை காவலில் திடீர் பாதிப்பு மருத்துவமனையில் சிவகுமார் அனுமதி: ரத்த அழுத்தம் உயர்ந்தது

பெங்களூரு: ரத்த அழுத்தம் காரணமாக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்  அடிப்படையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை  நடத்தினர். அதே சமயத்தில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ.8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணம் என்று ஐடி அதிகாரிகள்  தீர்மானித்தனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை மட்டுமில்லாமல், மத்திய அமலாக்க படையும் வழக்கு பதிவு செய்தது. இப்புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி டி.கே.சிவகுமார் மட்டுமில்லாமல் புகாரில் தொடர்புடைய மேலும் பலருக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று கடந்த 30ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிகே சிவகுமார் நேரில் ஆஜரானார். நான்கு நாட்கள் சிவகுமாரிடம் விசாரணை நடத்திய பின், அவரை கைது செய்த அதிகாரிகள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 13ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவரிடம் கடந்த 11 நாட்களாக தினமும் விசாரணை நடத்தியபின் நேற்று முன்தினம் காவல் முடிந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி மேலும் நான்கு நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக டெல்லி துக்ளக் சாலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து லோக்நாயக் பவனில் உள்ள அமாலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சில மணி நேரத்தில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரது டாக்டர் ரங்கநாத்தை அழைத்து பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் அதிகமிருந்தது. அதை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து ராம்மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு காய்ச்சல் இருப்பதும் அப்போது தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். இதனால் பார்வையாளர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. டிகே சிவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டிகே சிவகுமார் சிகிச்சை பெற்ற அறையின் முன் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு  இருந்தனர். அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories: