×

மத்திய பிரதேசத்தில் பால் பூத்தில் கோழிக்கறி விற்பனை: பாஜ கடும் எதிர்ப்பு

போபால்: மத்திய பிரதேச காடுகளில் வளரும் கருங்கோழி அல்லது நாட்டுக் கருப்புக் கோழி, `கடக்நாத்’ கோழி என்று அழைக்கப்படுகிறது. இதன் இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், ஹார்மோன் சத்துக்களும் உள்ளன. மருத்துவ குணம் கொண்ட இக்கோழி இறைச்சி இரத்த கொதிப்பு, இதய நோய், நரம்புத் தளர்ச்சி, சிரங்கு, வாதம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நிறைந்த புரத சத்து, இரும்புச் சத்து, குறைந்த கொழுப்பு இருப்பதால் நோய்  எதிர்ப்பு சக்திமிக்க இந்த இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. இந்நிலையில், பால் சில்லறை விற்பனை மையங்களில் இக்கோழி இறைச்சியை சோதனை அடிப்படையில் விற்க மபி அரசு  முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநில கால்நடைத் துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் கூறுகையில், ``சோதனை முயற்சியாக போபாலில் உள்ள பால் விற்பனை மையத்தில் கடக்நாத் கோழி இறைச்சியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றியை பொருத்து மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்’’  என்றார். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ மாநிலத் தலைவர் ரமேஷ்வர் சர்மா கூறுகையில், ``ஒரே இடத்தில் பாலையும், கோழி இறைச்சியையும் விற்க கூடாது. இந்துகள் புனிதமாக கருதும் பால், நோன்பு உள்ளிட்ட மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்’’ என்றார். ஆனால், `ஒரே இடத்தில் தனித்தனி குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து அவை விற்பனை செய்யப்படும்’ என்று மாநில அரசு பதில் அளித்துள்ளது. கடக்நாத் கோழிக்கு மத்திய பிரதேசமும், சட்டீஸ்கரும் உரிமை கோரி வந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட்டில் இது மத்திய பிரதேசத்தை சேர்ந்தது என புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

Tags : Madhya Pradesh ,protests ,Baja , Madhya Pradesh, Milk Booth, Poultry, Sale, Baja Heavy, Resistance
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி