தடையை மீறி பயன்படுத்தியதால் ஆத்திரம் 16 செல்போனை சுத்தியலால் உடைத்த கல்லூரி முதல்வர்: அதிர்ச்சியில் மாணவ, மாணவிகள்

கார்வார்: கல்லூரியில் போன் பயன்படுத்தக்கூடாது எனக்கூறியும் அதையும் மீறி  உபயோகித்ததால் ஆத்திரம் அடைந்த கல்லூரி முதல்வர், மாணவர்களிடம் இருந்த 16 செல்போன்களை பறித்து உடைத்தெறிந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில், வடகனரா மாவட்டம், கார்வாரில் இயங்கி வருகிறது எம்.இ.எஸ். சைத்தன்யா கல்லூரி, இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஆர்.எம். பட். இவர் இக்கல்லூரியில் மிகவும் கண்டிப்புடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அப்படி இருந்தும், மாணவர்கள் பல வகுப்பறைகளில் செல்போன்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் சந்தேகம் அடைந்த முதல்வர் ஆர்.எம். பட் மாணவர்களை விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். அப்போது சோதனை செய்ததில் 16 மாணவ, மாணவிகள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரின் செல்போன்களையும் பறித்த முதல்வர், அவற்றை சுத்தியலால் உடைத்தார். மாணவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் முதல்வர் செல்போன்களை சுத்தியலால் சுக்குநூறாக உடைத்தெறிந்தார். இச்சம்பவம் மாணவ, மாணவிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு  ஏற்பட்டது.

இது குறித்து செல்போன்களை இழந்த மாணவிகள் கூறுகையில், ‘‘நாங்கள் வெகு தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வருகிறோம். எங்களின் பாதுகாப்புக்காக செல்போன்களை பயன்படுத்துகிறோம். இதுபோன்ற காரணங்களை  கூறியும், கல்லூரி முதல்வர் எங்களின் செல்போன்களை பறித்து உடைத்து விட்டார்,’’ என வேதனையுடன் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி முதல்வர் ஆர்.எம். பட் கூறியதாவது: ‘‘மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு செல்போன்களை கொண்டு வரக்கூடாது என கூறுகிறோம்.

ஒருவேளை செல்போன்களை கொண்டு வந்தாலும், அவற்றை சுவிட்ச் ஆப் செய்து வைத்துக் கொள்ளும்படி கூறுகிறோம். ஆனால், வகுப்பறையில் எக்காரணத்தை கொண்டும் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று கூறியும் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக செல்போன்கள் கொண்டு வர தடை விதித்துள்ளோம்,’’  என்றார். 

Related Stories: