திருப்பதிக்கு சென்றுவிட்டு வந்தபோது கார் தீப்பற்றியது 5 பேர் கருகி பலி

கோலார்: திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது கார் கவிழ்ந்து தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். பெங்களூரு ஹென்னூர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்வி, கலா, பவன், ராம், சாயி அஸ்ரத் மற்றும் விஷ்ணு. இவர்கள் இரு தினங்களுக்கு முன் காரில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துக்கொண்டு நேற்று இரவு திருப்பதியிலிருந்து வந்து கொண்டு இருந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கார் ஆந்திர மாநிலம், சித்தூர்  மாவட்டம், பலமநேர் மண்டலத்திற்கு உட்பட்ட கங்காவரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடி இறுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது. சிறிது நேரத்தில் கார் குபீர் என தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் விஷ்ணு மட்டும் எப்படியோ காரில் இருந்து வெளியேறினார். ஆனால், ஜான்வி, கலா, பவன், ராம், சாயி அஸ்ரத் ஆகிய 5 பேரும் காரில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே உடல் கருதி உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயத்துடன் தப்பிய விஷ்ணுவை சிகிச்சைக்காக பலமநேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில்  இரு பெண்கள், 3 சிறுவர்கள் இறந்துள்ளனர். சம்பவம்பற்றி போலீசார் கூறுகையில், ‘‘வேகமாக சென்றதால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என சந்தேகம் எழுகிறது. கார் தீப்பற்றி எரிவதை பார்த்த சிலர் அதன் உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றுள்ளனர்’’ என்றனர்.

Related Stories: