ஆன்லைன் விற்பனை சலுகைகளுக்கு சிக்கல்

புதுடெல்லி: பண்டிகை காலங்களில் உள்நாட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மலிவு விலை மற்றும் அதிரடி தள்ளுபடி விற்பனையில் ஈடுபடும் பிலிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வியாபாரிகள் அமைப்பு (சிஏஐடி) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் அமைப்பின் சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்கள், பண்டிகை காலங்களில் தாங்கள் விற்கும் பொருட்களுக்கு அதிக அளவில் தள்ளுபடி அறிவிக்கின்றனர். பண்டிகை காலங்களில் இந்த விலை குறைப்பால் ஈர்க்கப்பட்டு பல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குகின்றனர். இப்படி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் செய்வது, அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளுக்கு முரணானது. இது தெரிந்தும் திட்டமிட்டு, பகிரங்கமாகவே தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கின்றன. இது எங்களை போன்ற வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது. இதனால், பண்டிகை காலங்களில் ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை வாரியிறைப்பதை தடை செய்ய வேண்டும்.

அமைச்சர் இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்யும் நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது: பண்டிகை காலத்தில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்குவார்கள். அவர்களின் தேவையை அறிந்து நாங்கள் பொருட்களை விற்பனை செய்து எங்களது வியாபாரத்தை செய்துகிறோம். மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய அளவில் தொழில் செய்வோர், மகளிர் தொழில் முனைவோர், நெசவாளர்கள், கைவினைஞர்கள், இவர்களின் பொருட்களை பெரிய அளவில் சந்தைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுகிறோம்.

உள்ளூர் தயாரிப்பாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறோம். உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். மோடியின் தொலைநோக்கு செயல் திட்டங்களுக்கு உதவும் வகையில் செயல்படுகிறோம். இவ்வாறு நிறுவனங்கள் தெரிவித்தன. ஆன்லைன் விற்பனையில் சலுகைகளுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சலுகைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

* பண்டிகை காலங்களில் தள்ளுபடி மற்றும் மலிவு விலை சலுகை போன்றவற்றை அறிவித்து ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் விதிமீறல் செய்கின்றன.

* ஆன்லைன் விற்பனையால் சில்லறை, உள்நாட்டில் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

Related Stories: