வழக்கிலிருந்து விடுவிக்க 2 கோடி லஞ்சம் சென்னை கட்டுமான நிறுவன அதிபர் கைது

* சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க் புகாரால் நடவடிக்கை

* உள்துறை அமைச்சக அதிகாரி, புரோக்கரும் சிக்கினர்

புதுடெல்லி: சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவன வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், நிறுவன துணை தலைவர், உள்துறை அமைச்சக அதிகாரி, புரோக்கர் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். சென்னை, வானகரத்தில் சோமா எண்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமசந்திர ராவ். மேற்கண்ட நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், நிலுவையில் உள்ள விசாரணையை அழிக்க அல்லது நிறுவனத்துக்கு சாதகமாக வழக்கை கொண்டு செல்ல, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் சிலரை ராமசந்திர ராவ் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய சில புரோக்கர்களையும், ராமசந்திர ராவ் சந்தித்து, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக பேரம் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் - 1 பிரிவில் நியமிக்கப்பட்ட தீராஜ் சிங் என்பவர், ராமசந்திர ராவின் வலையில் சிக்கினார். அவர், சிபிஐ பதிவு ெசய்த வழக்கை முடித்து கொடுக்க, 2 கோடி வரை பேரம் பேசியுள்ளார். இதற்காக, தமிழகத்தில் மதுரை, தர்மபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி, தற்போது சிபிஐ (ஊழல் தடுப்பு பிரிவு) துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) அஸ்ரா கார்க்கையும் (தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி) சந்தித்து, அவரது உதவியை நாடியுள்ளனர்.

இதற்காக, அஸ்ரா கார்க்கை ஒரு இடத்துக்கு அழைத்தனர். அங்கு சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிரான விஷயத்தை தீர்க்க, லஞ்சமாக ₹2 கோடி தருவதாக, ராமசந்திர ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அஸ்ரா கார்க், தனது மூத்த அதிகாரிகளிடம், நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதன் ெதாடர்ச்சியாக, கடந்த 11ம் தேதி அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிஐ மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அஸ்ரா கார்க் கொடுத்த புகாரில், ‘எனக்குத் தெரிந்த உள்துறையில் பணியாற்றும் தீராஜ் சிங் என்பவர், ஒரு நபரைச் சந்திக்க என்னை அழைத்தார். நானும் அவரிடம் ெதாடர்பு ெகாண்டேன். சில நாட்களுக்கு பின், சோமா எண்டர்பிரைசஸ் பிரதிநிதியான ராவை, உள்துறை அமைச்சக அதிகாரி தீராஜ் சிங் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள், சோமா எண்டர்பிரைசஸ் வழக்கில், அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க எனக்கு ₹ 2 கோடி லஞ்சம் தருவதாக தெரிவித்தனர்’ என்று கூறியுள்ளார்.அதிகாரிகளின் திட்டப்படி, தீராஜ் சிங், புரோக்கர் குப்தா ஆகியோர், கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு அஸ்ரா கார்க் அலுவலகத்தின் பின்புறம் லஞ்சப் பணம் 2 கோடியை எடுத்துக் கொண்டு வந்தனர். அந்த இடத்திற்கு அஸ்ரா கார்க், தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள சிஎன்ஜி நிலையத்துக்கு தனது கார் டிரைவருடன் சென்றார். அங்கிருந்த 2 பேரும், சோமா எண்டர்பிரைசஸ் மீதான விவகாரத்தை தீர்க்க 2 கோடி லஞ்சத்தை அஸ்ரா கார்க்கிடம் கொடுக்க முயன்றனர்.

ஏறக்குறைய 20 நிமிட உரையாடல் நடந்த பின்னர், தீராஜ், குப்தா ஆகியோரை போலீசார் கையும் களவுமாக பிடித்து  சென்றனர். தொடர்ந்து, அவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். முன்னதாக, லஞ்சப் பணம் கொடுப்பது ெதாடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதன்படி, கைதான 2 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராவை, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே புரோக்கர் தினேஷ் சந்த்  குப்தா மீது சிபிஐ வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2013ம் ஆண்டில், சிபிஐ போலீஸ் சூப்பிரண்டு விவேக் தத்துக்கு லஞ்சம்  கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர், 2017ம் ஆண்டில் இவ்வழக்கில் தினேஷ் சந்த் குப்தாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால், சிறப்பு சிபிஐ  நீதிமன்றத்தால் குப்தா விடுவிக்கப்பட்டார். ஆனால், குப்தா மீது  கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மற்றொரு விவகாரத்தில் லஞ்சம் வாங்கி கொடுக்க புரோக்கர் வேலை பார்த்த குப்தா, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: