ஜொள்ளுவிடும் 3 ஸ்டாரை கண்டு அலறும் பெண் போலீசார்

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்களை வாலிபர் ஒருவர் கடந்த 12ம் தேதி இன்ச் இன்ச்சாக வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இதைப்பார்த்து சிலர் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வாலிபரை வீடியோ கேமராவுடன், குண்டு கட்டாக தூக்கி சென்றனர். அந்த நேரத்தில் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரி இல்லாததால், தெற்கு போலீஸ் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்தார். எதற்காக, வீடியோ எடுத்தாய்? என்று விசாரணையை தொடங்கிய சில நிமிடத்தில், வாலிபரின் உறவினர் பெண் ஒருவர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பெண்ணை பார்த்த அதிகாரி, ‘நீங்க சொன்னா? உடனே விடுவிப்பேன்.

உங்க முகவரியை கொடுங்கள். ஏதாவது பிரச்னை வந்தா கூப்பிடுவோம்’ என்று முகவரி மற்றும் செல்போன் எண்ணை வாங்கி கொண்டாராம். வீடியோ கேமராவுடன் வாலிபரையும் விடுவித்துவிட்டார். சிறிது நேரத்துக்கு முன்பு கடும் ஆத்திரத்தில் சிவந்த கண்களுடன் போலீசாரை வறுத்தெடுத்த அதிகாரியின் கண்கள் பெண்ணை கண்டதும் பிரகாசமாகிவிட்டதே என்று அங்கிருந்த போலீசார் தலையில் அடித்து கொண்டனர். இவர் ஏற்கனவே தான் பணிபுரிந்த ஸ்டேஷன்களில் எல்லாம் பெண் காக்கிகளை ஏதாவது பணியை கூறி அருகில் அழைத்து ஜொள்ளுவிடுவாராம். ராமநாதபுரத்தில் இருந்து இங்கு வந்தும் அதே வேலையைத்தான் செய்கிறாராம். அதேபோல் புகார் கொடுக்க வரும் பெண் அழகாக இருந்தால் அவ்வளவுதானாம், ஜொள்ளுக்கு அளவே இருக்காதாம்.

‘ஆர்டர்லி’ பணியை மாற்றிய கமிஷனர்

நெல்லை மாநகரத்திற்கு பொறுப்பேற்ற புதிய போலீஸ் கமிஷனர் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியிலுள்ள போலீசாரின்  எண்ணிக்கை குறித்து கேட்டாராம். அப்போது ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்தும் தலா 10 போலீசார் என மொத்தம் 150க்கும் மேற்பட்ட போலீசார்  போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களின் வீடுகளில் ஆர்டர்லி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு அதிகாரிகளின் வீட்டிலும் கார் டிரைவர், கன் மேன் தவிர யாருக்கும் இடம் கிடையாது. அனைத்து காவலர்களும் உடனே தங்களது போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டார். முதலில் தனது வீட்டிலிருந்த சமையல்கார்கள் உள்ளிட்ட 7 காவலர்களை போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு அனுப்பினார். ஆர்டர்லி முறை ஒழிந்ததால் பல போலீசார் நிம்மதியாக உள்ளனராம்.

மோசடி வழக்கை விசாரிக்க வங்கி அதிகாரிகளிடம் பேரம்

மலைக்கோட்டை மாநகரில் ரயில் தளவாட உற்பத்திக்கு பெயர் போன பகுதியில் இருந்த உதவி கமிஷனர் மணல் மாபியாக்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த கமிஷனர் அவரை மத்திய பஸ் நிலைய பகுதிக்கு குற்றப்பிரிவிற்கு மாற்றினார். இவர் குற்றப்பிரிவிற்கு மாறியதை அடுத்து வடிவேல் பாணியில் கிணற்றை காணோம் என்ற ரீதியில் கமிஷனருக்கு புகார் வந்தது. வங்கியில் வீடு மற்றும் இடத்தை அடமானம் வைத்து வாங்கிய ₹2 கோடி கடனுக்கு ஜப்தி செய்ய சென்ற வங்கி அதிகாரிகளுக்கு அங்கு வாய்க்காலை தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிந்ததை அடுத்து பிரபல கல்லூரி பேராசிரியர் மீது புகார் அளித்தனர். இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்ைக எடுக்க குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் புகாரை விசாரிக்காமல் வங்கி அதிகாரிகளிடம் பேரம் பேசப்பட்டது. பேரம் படியாததால் ₹25 கோடி மோசடி வழக்கு விசாரணை இருப்பதால், ₹2 கோடி வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என போலீசார் கை விரித்தனர். இதையடுத்து மீண்டும் கமிஷனரை சந்தித்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து மீண்டும் புகார் கூற, வழக்கை மாநகர குற்றப்பிரிவிற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அங்கு விசாரித்த போலீசார் பேராசிரியர் உள்பட 3 பேரை கைது ெசய்து சிறையில் தள்ளினர். தலைமையிடத்தில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டாலும் வெட்ட வேண்டியதை வெட்டினால் மட்டுமே நடவடிக்கை என்பதில் ஆணிவேராக உள்ளனர்.

ஐஜிக்கு பெப்பே காட்டிய லேடி இன்சு...

தமிழகத்தில் சமீபத்தில் எஸ்ஐக்களாக இருந்து பலர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் எஸ்பி அலுவலக மானிட்டரிங் எஸ்ஐயாக இருந்த பிரபல நடிகையின் மூன்றெழுத்து பெயரைக்கொண்ட பெண் எஸ்ஐ, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வுபெற்று போஸ்டிங்காக வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரிப்போர்ட் செய்யச் சென்றாராம். அங்கு ஐஜி அறையின் வெளிப்பகுதியில் சக இன்ஸ்பெக்டரோடு சிரிச்சி, பேசி ஐஜியை பற்றியே கமாண்ட் அடித்து கொண்டிருந்தாராம். இதனை கேமிராமூலம் கண்காணித்த ஐஜி அப்செட்டாகி விட்டாராம். விழுப்புரம், கடலூர் மாவட்டத்துக்கு போஸ்டிங் கேட்ட அந்த லேடியை வேலூர் ரேஞ்சுக்கு தூக்கி அடிச்சிபுட்டாராம். அவருடன் பேசிக்கொண்டிருந்தவரும் தப்பவில்லையாம். இதற்கெல்லாம் கவலைப்படாத லேடி இன்சு, தனது கணவர் உள்ளூர் அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மூலம் 24 மணி நேரத்தில் விழுப்புரத்திற்கே, அதுவும் ஏற்கனவே வேலைசெய்த இடத்திற்கே போஸ்டிங் ஆர்டர் வாங்கிட்டுவந்து ஜாயின்பன்னிட்டாராம். லேடி இன்ஸ்பெக்டர், ஐஜிக்கே பெப்பே காட்டிவிட்டு எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவரை பார்த்தால் உயர் அதிகாரிகளுக்கே சற்று பயத்தோடுதான் வலம் வருகிறார்களாம்.

‘இன்பார்மர்களால்’ அதிகரிக்கும் மணல் கொள்ளை

தேனி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மணல் உள்ளிட்ட கனிமவளங்களைக் கடத்தும் கும்பலுக்கு, ரைடு உள்ளிட்ட தகவல்களை தர போலீஸ் தரப்புக்குள்ளேயே சில இன்பார்மர்கள் இருக்கின்றனராம். இதனால் ரைடு நடக்கும் இடங்களை முன்கூட்டியே கும்பல் தெரிந்து கொள்கிறதாம். மேலும், மணல் விற்பனையில் கிடைத்த லாபத்தின் ஒரு பங்கை போலீசாருக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார்களாம். குறிப்பாக, இரவு நேரங்களில்தான் தகவல் தொடர்பு அதிகமாக உள்ளதாம். தேனி, பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரர், இரவுப்பணியை விரும்பி கேட்பாராம். அங்கிருக்கும் ‘பீட்’ நோட்டை எடுத்து, எந்தெந்த போலீசுக்கு, எந்தெந்த ஏரியாவில் ‘டூட்டி’ என்று லிஸ்ட் எடுத்துக் கொள்வாராம். அதன்படி, கனிமவள கொள்ளையர்களுக்கு போனில் தகவல் அளிப்பாராம். பழனிச்செட்டிபட்டியில் இன்ஸ்பெக்டர், வீரபாண்டியில் டிஎஸ்பி, தொம்புசேரியில் எஸ்ஐ ரோந்து பணி என கூறி விடுவாராம். அதேநேரம் அதிகம் ரைடு நடக்காத பகுதியையும் குறிப்பிட்டு சொல்வாராம். இப்படி பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் இருக்கிற ‘இன்பார்மர்களால்’, தேனி மாவட்ட கனிமவள கொள்ளையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

மாங்கனி சிட்டி போலீசுங்க கல்லா கட்டும் சந்துக்கடைகள்

மாங்கனி சிட்டியில் சந்துக்கடைகளும், சூதாட்ட கிளப்புகளும் களை கட்டுதாம். அதிலும் தாயின் பெயரில் அமைந்துள்ள பேட்டையில் 15க்கும் மேற்பட்ட சந்துக்கடைகளும், கிளப்புகளும் இருக்காம். இதற்கு பலனாக, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு மாசம் ₹50ஆயிரம் வருதாம். 15பேர் பணியாற்றும் இடத்தில் 5பேருக்கு மட்டுமே வரிசை பிரகாரம் இதில் பங்கு கிடைக்குதாம். பழைய கமிஷனர் இருந்தப்போ, சந்துக்கடை நடத்திய பிரபல  ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்தாராம். ஆனா, இப்போ அந்த ரவுடியே 5 கடைகளை ஜோராக நடத்தி கிட்டு இருக்காராம். இதை நுண்ணறிவு பிரிவு எப்படியாவது கமிஷனர் பார்வைக்கு கொண்டு போகும் என்று பார்த்தால் அதுக்கும் வழியில்லையாம். அவர்களில் சிலருக்கும் பலன்போவதால், புலம்புவதை தவிர எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் பாதிக்கப்பட்ட காக்கிகள். சிட்டியின் பல பேட்டைகளில் சந்து மதுக்கடைகளின் சாம்ராஜ்யம் தான் நடக்குது. அதன் மூலம் லம்பா ஒரு அமவுண்ட், அய்யாக்களுக்கு கிடைக்குது என்கின்றனர் அடிப்பொடிகள்.

Related Stories: