அசத்தும் கேடிஎம் 790 டியூக்

கேடிஎம் டியூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த மாடலாக 790 டியூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் வரிசையில் உள்ள பைக்குகள் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் விற்பனையாகி வரும் நிலையில், முதல்முறையாக இந்த பைக் இரட்டை சிலிண்டர் இன்ஜினுடன் வருகிறது. இந்த பைக்கில், பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 799 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 83 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக், எல்இடி பகல்நேர விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டிஸ்க் பிரேக், பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுபவர் விருப்பத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யும் ஹேண்டில்பார் அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.

Advertising
Advertising

இந்த பைக்கில் ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் மோடு என நான்குவிதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இடம்பெற்றிருப்பதால், மிக விரைவாக கியர் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். இந்த பைக்கில், பிளை பை வயர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வழி வகுக்கும். முன்புறத்தில் WP அப்சைடு டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. மோட்டோ2 பந்தய பைக்குகளுக்கு பிரேக்குகளை சப்ளை செய்யும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜே ஜுவான் நிறுவனத்திடம் இருந்து பிரேக்குகள் சப்ளை பெறப்படுகின்றன. இந்த ஆண்டு 100 யூனிட்டுகளை விற்பனை செய்யும் இலக்குடன் இந்த பைக்கை இறக்குமதி செய்ய உள்ளது கேடிஎம் நிறுவனம். அதிக டிமான்ட் இருந்தால், எதிர்காலத்தில் புனே அருகில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் இந்த பைக்கை உற்பத்தி செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய கேடிஎம் 790 டியூக் பைக்கிற்கு 30,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ₹8 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்.வி அகுஸ்ட்டா புருட்டேல் 800, டுகாட்டி மான்ஸ்ட்டர் 797, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ், கவாஸாகி இசட் 900 மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஆகிய நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் இந்த பைக் போட்டி போடும்.

Related Stories: