புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு..!

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள்(16ம் தேதி) திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 10ம் தேதி முதல் நேற்று வரை(13ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடந்தன. ஓணம் பண்டிகையான 11ம் தேதி சபரிமலையில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் ஓண விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் ஓணம் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்தன. நேற்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள்(16ம் தேதி) மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த நாள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்த 5 நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: