இது இந்தியா - இந்தி-யா? அல்ல... இன்னொரு மொழிப்போருக்கு திமுக ஆயத்தமாகும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: இந்தியாவின் அடையாளம் இந்தி மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பல மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனி முக்கியத்துவம் உண்டு என்றும் மக்கள் தங்கள் தாய் மொழியுடன் இந்தியையும் பயில வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் ஒருமைபாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியிருப்பது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதுவதாக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமது கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் இன்னொரு மொழிப்போருக்கு திமுக ஆயத்தமாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மற்ற மாநிலங்களையும் இணைத்து ஜனநாயக போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது என்றும், நாட்டின் ஒருமைபாட்டை காக்க திமுக தயாராக இருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவா? இந்தி-யாவா? என்று உள்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தை சிதைக்கும் நடவடிக்கையாக பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், இந்தி பேசாத மக்களை 2-ம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை தெரிகிறது என்று தெரிவித்தார். குடிமை, ரயில்வே, அஞ்சல் ஒவ்வொன்றிலும் இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருவதாகவும், தமிழையையும் காத்து, பிறமொழிகளுக்கும் திமுக அரணாக விளங்குகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பன்முகத்தன்மை தான்

வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் இணைந்திருக்கும் பன்முகத்தன்மை தான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை என்று ஸ்டாலின் அறி்க்கை வெளியிட்டுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்கத்திலேய தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: