உறவினர் சந்தேகத்தால் வசமாக சிக்கினார் மருத்துவர் என பொய் சொல்லி திருமணம் செய்த வாலிபர் கைது

திருவொற்றியூர்: மாதவரத்தில் டாக்டர் என ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாதவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (26) பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். அப்போது, வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (34) என்பவரை பிடித்ததால், ஸ்ரீதேவிக்கு திருணம் செய்ய முடிவு செய்தனர். மாப்பிள்ளை குறித்து விசாரித்தபோது, அவர் தன்னை டாக்டர் என்று கூறினார். இதையடுத்து, கடந்த 11ம் தேதி கொளத்தூரில் உள்ள அம்மன் கோயிலில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ரெட்டேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர் ஒருவர், ‘‘மாப்பிள்ளை கார்த்திக் எம்பிபிஎஸ் படிக்கவில்லை. நீங்கள் நன்றாக விசாரித்தீர்களா,’’ என்று மணமகள் வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த மணமகளின் பெற்றோர், கார்த்திக்கிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து திருமண மண்டபத்திற்கு வந்த மாதவரம் போலீசார், கார்த்திக்கிடம் விசாரித்தபோது, எம்பிபிஎஸ் படிக்காமல், பெண் வீட்டாரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.வரவேற்பு நிகழ்ச்சி பாதியிலேயே நின்றதால், உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர். மேலும் விசாரணையில் கார்த்திக் கோயம்புத்தூரை சேர்ந்தவர். கடந்த 2003-2004ம் ஆண்டு வரை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் மட்டுமே எம்பிபிஎஸ் படித்து பாதியில் நின்று விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து வில்லிவாக்கத்திற்கு வந்த கார்த்திக், அங்கு ஏற்கனவே ஒருமுறை அறிமுகமான ஒருவரிடம் நான் ஒரு அனாதை. எம்பிபிஎஸ் படித்திருக்கிறேன்.

எனக்கு தங்க இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அனாதை என்றதால் வீட்டில் தங்க அவர் இடம் கொடுத்துள்ளார். பின்னர், தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும், பெண் பாருங்கள் என அவரிடம் கூறியுள்ளார். அவரும் தெரிந்த இடமான ஸ்ரீதேவியின் பெற்றோர்களை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு திருமண வேலை நடந்துள்ளது. மேலும் திருமண செலவுக்காக 11 லட்சம் பெண் வீட்டாரிடமிருந்து வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கு சகோதரி வசந்தி என்பவரும், அவரது கணவர் ஜெயக்குமாரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து போலி டாக்டர் கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக வசந்தி, ஜெயக்குமார், நணபர் சொக்கலிங்கம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: