ரிஷப் பன்ட் அவசரப்படக் கூடாது… குளூஸ்னர் குட்டு

தரம்சாலா: இளம் வீரர் ரிஷப் பன்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் பொறுமை அவசியம் என்று தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் பயிற்சியாளர் லேன்ஸ் குளூஸ்னர் கூறியுள்ளார். இந்தியா  தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி தரம்சாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் மிகத் திறமையான வீரராக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்று தடுமாறி வருகிறார். அவரது பேட்டிங் சராசரி ஒருநாள் போட்டிகளில் 22.90 ரன் மற்றும் டி20 போட்டிகளில் 21.57 ரன் என்ற அளவிலேயே உள்ளது.

இது குறித்து தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் பயிற்சியாளர் குளூஸ்னர் கூறியதாவது: டெல்லி அணியின் ஆலோசகராக இருந்தபோது ரிஷப் திறமையை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் தனது திறமையை இன்னும் முழுமையாக வெளிப்படுட்தவில்லை என்றே சொல்ல வேண்டும். அவர் அவசரப்பட்டு விக்கெட்டை தானம் செய்வது தான் இதற்கு முக்கிய காரணம். களத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் ஒவ்வொரு இன்னிங்சிலும் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும். தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதை விட, அவர் மற்ற வீரர்களின் தவறுகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை தவிர்த்தால் பேட்டிங்கில் இன்னும் அதிகமாக சாதிக்கலாம். அதே சமயம் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் கொஞ்சமும் தயங்கக் கூடாது. டெல்லி அணியின் பேட்டிங் ஆலோசகராக மீண்டும் செயல்பட ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு குளூஸ்னர் கூறியுள்ளார்.

Related Stories: